அழகான மலைவாழ் கிராமத்து சிறுவன் வெற்றிக்கு பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் கனவு. இதற்காக அவரது அத்தை மகள் அவரை ஊக்கப்படுத்துகிறார், நேசிக்கிறார். ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த சிறுமியும் அவர் மீது ஆர்வம் கொள்கிறார். குடும்பத்தில் நடக்கும் ஒரு பிரச்சினை காரணமாக காசிக்கு சென்று சாமியாராகிறார் வெற்றி. 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது தற்போது இளம் பெண்களாகிவிட்ட அந்த ஜெர்மன் பெண்ணையும், அத்தை மகளையும் சந்திக்கிறார். அவர்கள் இவர் வாழ்க்கையில் நடத்திய மாற்றம் என்ன என்பதுதான் படத்தின் கதை.
குடும்ப சொத்து சண்டை, எழுத்து, காதல், ஆன்மீகம் எனஅனைத்தையும் கலந்து ஒரு சென்டிமெண்ட் படம் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சிவா ஆர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
வெளிநாட்டுப் பெண்ணுக்கும் நாயகனுக்குமான சிறுவயது தொடர்பு, பூம்பாறை வாழ்க்கை, இடைவேளை ட்விஸ்ட் என பல காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் துணை புரிகின்றன. விந்தன் ஸ்டாலினின் ஒளிப்பதிவில் காசி, ரிஷிகேஷின் இயற்கையும் வாராணசியின் இரவு நேர காட்சியும் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அழகைத் தருகின்றன. மனோஜ் கிருஷ்ணா பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.
கேரக்டருக்கு ஏற்றபடி, சாதுவாக நீண்ட தலைமுடி, தாடி என எதையோ இழந்த தோற்றத்திலேயே வருகிறார், நாயகன் வெற்றி. ஜனனி தாமஸாக வரும் மதுரா, நடிப்பில் கவர்கிறார். இயல்பான அவரின் சிரிப்பும் பேச்சும் ரசிக்க வைக்கின்றன. நடிப்பு அவருக்கு இயல்பாகவே வருகிறது. நூலகராகவரும் அனு சித்தாரா நடுத்தர வயது பெண்களின் அழகின் அடையாளமாக இருக்கிறார். ஆன்மீக குரு ஹரீஷ் பெரேடி,மேன்ஷன் உரிமையாளர் கருணாகரன், ஹீரோவின் தந்தையாக அருவி மதன், மாமாவாக விவேக் பிரசன்னா என அனைவரும் கொடுத்தவேலையை செய்திருக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளரின் வாழ்க்கை பயணத்தை நாவல் படித்தது போன்று உணர வைக்கிறது படம்.