பிச்சைக்காரனாக நடிக்க கவின் ஒப்புக்கொண்டது எப்படி : இயக்குனர் விளக்கம்

லோகேஷ் கனகராஜ், அட்லீ, வரிசையில் அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘பிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் ‘Bloody Beggar’ (பிளடி பெக்கர்) என்ற படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ்லி , மாருதி பிரகாஷ்ராஜ், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜென் மார்டின் இசையமைக்கிறார். சுஜித்சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் கூறியதாவது: இந்தப் படம் பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல. அவர்கள் பிரச்சினையை பேசும் படமும் அல்ல. படத்தின் நாயகன் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக வாழ்கிறவன். ஆசைகள் எதுவும் இல்லாததால் நான் சந்தோஷமாக இருக்கிறேன் ஆசை உள்ளவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது அவனது பாலிசி. மற்றவர்களின் நடவடிக்கைகளை கிண்டல் செய்து கொண்டு தன் போக்கில் வாழ்கிறான். அப்படிப்பட்டவனுக்கு செய்ய வேண்டிய காரியம் ஒன்று வருகிறது. அது என்ன அதன் பிறகு அவனுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தை தயாரிக்கும் நெல்சன் எனது 10 வருட நண்பர். அவருடன் ‘டாக்டர்’ உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றி இருக்கிறேன். நானும் இயக்குனராக வேண்டும் என்று இந்த கதையை எழுதி அவரிடம் காட்டினேன். அவருக்கு கதை பிடித்திருந்தால் ஒரு தயாரிப்பாளரை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். ஆனால் திடீர் என்று கதையின் மீது அவருக்கு அபார நம்பிக்கை இருந்ததால் தானே தயாரிக்க முடிவு செய்தார். கதையை கேட்டதும் சில கருத்துக்களை சொன்ன அவர், படப்பிடிப்பு தொடங்கியதும், எதிலும் தலையிடவில்லை. படத்தை பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாக பாராட்டினர்.

இந்தக் கதையை எழுதும்போது வேறு சில நடிகர்களை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் பிச்சைக்காரராக நடிக்க அவர்கள் முன் வருவார்களா என்ற தயக்கம் இருந்தது. அவரிடம் இந்த கதையை சொன்ன போது அவருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டு ஒத்துக் கொண்டார். பலமுறை கதையை கேட்டு உள்வாங்கி அவரும் தனியாக சில ரெபெரென்ஸ்களை வைத்துக்கொண்டு இந்த படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தில் நாயகி என்று யாரும் இல்லை. ஆனால் கதையோடு கடந்து செல்கிற பெண் கதாபாத்திரங்கள் உண்டு. கவினுக்கு காதல் உண்டு அதுவும் கதையோடு கடந்து செல்லும். பிளாக் காமெடி திரில்லர் என்ற வகையில் இந்த படம் உருவாகி உள்ளது. எல்லா அம்சங்களும் அமைந்த பக்கா கமர்சியல் படம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.