1941ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் ‘ஆரியமாலா’, பி.யூ.சின்னப்பா, சரோஜினி தேவி நடித்த படம். புகழ்பெற்ற செவி வழி கதையான காத்தவராயன், ஆர்யமாலா காதலை மையமாக கொண்ட படம். தற்போது வெளிவந்துள்ள ஆர்யமாலா கதையும் காதல் கதைதான், இது நிகழ்கால காதல் கதை. அனை கிராமிய மணத்தோடு தெருக்கூத்து கலை பின்னணியில் தந்திருக்கும் படம்.
கிராமத்து பெண்ணான மனிஷா ஜித் தான் ஆர்யமாலா. அப்பா, அம்மா, தங்கையுடன் மகிழ்ச்சியுடன் வசித்தாலும் அவருக்கு ஒரு உடல்நல பிரச்சினை. அதாவது உரிய வயதை எட்டியும் அவர் பருவமடையவில்லை. அரிதான இந்த பிரச்சினையால் அவதிப்படுகிறார் மனிஷா. இது ஒரு பக்கம் வலியை கொடுத்தாலும், இன்னொரு பக்கம் கனவில் வந்து காதலிக்கும் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்கால் மகிழ்ச்சி அடைகிறார்.
அவர் கனவில் காணும் ஆர்.எஸ்.கார்த்திக் தெருக்கூத்து கலைஞனாக அதே ஊருக்கு வருகிறார். மனிஷாவை சந்தித்ததும் காதல் கொள்கிறார். காதல் கனிந்து வரும் நேரத்தில் திடீரென காதலை நிராகரிக்கிறார் மனிஷா. அதற்கு என்ன காரணம்? காதல் ஜெயித்ததா? என்பதுதான் ஆர்யமாலாவின் கதை.
தெருக்கூத்து கலைஞராகவும், காதல் கொண்ட கிராமத்து இளைஞராகவும் ஆர்.எஸ்.கார்த்திக் பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கிறார். மொத்த படத்தையும் தாங்கி நிற்பது நாயகி மனிஷா ஜித்தான். அம்மாவிடம் சிணுங்கல், தங்கையிடம் பாசம், கடவுளிடம் பக்தி, காதலனிடம் நேசம் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தி திறமையான நடிகையாக கவனிக்க வைக்கிறார். தாய் மாமனாக வரும் மாரிமுத்து, அம்மாவாக வரும் எலிசபெத், கூத்து கலைஞராக வரும் சிவசங்கர், ஊர் தலைவராக வரும் தவசி என அனைவரும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெய்சங்கர் ராமலிங்கம் கிராமத்து அழகை மண் வாசனையுடன் காட்டியுள்ளார். செல்வ நம்பியின் இசையில் பாடல்கள் மனதை வருடுகிறது. சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் தெருக்கூத்துக் கலை பின்னணியில் கவித்துவம் நிறைந்த அழகான காதல் படமாக கவனம் பெறுகிறது ஆர்யமாலா. தரமான படத்தை லாப நோக்கமின்றி தயாரித்திருக்கும் வடலூர் ஜே.சுதா ராஜலட்சுமி, மற்றும் ஜனா ஜாய் மூவிஸ் ஜேம்ஸ் யுவனும் பாராட்டுக்குரியவர்கள்.