திரைக்கதைக்கு புகழ்பெற்ற ஒரு ஆங்கில படத்தை தழுவி, அதனை தமிழுக்கு ஏற்ற மாதிரி டிங்கரிங் பண்ணி வெளிவந்திருக்கும் படம்.
ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் புதுமண தம்பதிகள். விடுமுறையை கொண்டாட கடற்கரையை ஒட்டி தாங்கள் புதிதாக வாங்கி உள்ள வில்லாவுக்கு (தனி வீடுகளின் தொகுப்பு) செல்கிறார்கள். அங்கு அவர்கள் சில அமானுஷ்ய சம்பவங்களை சந்திக்கிறார்கள். குறிப்பாக இவர்களின் வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் இவர்களை போன்றே அச்சு அசலாக இன்னொரு தம்பதிகள் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் யார்? இவர்களுக்கும், அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை.
இரண்டு கேரக்டர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் மிரட்டி இருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணியம். இதுவரை நேரடி படங்களை மட்டுமே தயாரித்து வந்த பொட்டேன்ஷியல் ஸ்டூடியோ தயாரித்துள்ள முதல் ரீமேக் படம்.
மொத்த படத்தையும் தாங்கி பிடிப்பவர்கள் ஜீவாவும், பிரியா பவானி சங்கரும், ஒரு வீடு, ஒரு இரவு, ஒரே உடை இவற்றை வைத்துக் கொண்டு தங்களின் நடிப்பால் படத்தை தாங்கி பிடிக்கிறார்கள். பயம் கலந்த அசாத்திய துணிச்சடன் ஜீவாவும், பயமும், மிரட்சியும் கலந்து பிரியாவும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் தவிர விவேக் பிரசன்னா, யோக் ஜேப்பி, ஷாரா, ஸ்வயம் சித்தா ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு பயம் கூட்டுகிறது. குறிப்பாக தெருவுக்கு இடையில் வரும் அந்த கருப்பு பகுதியை காட்டியிருப்பது ஹாலிவுட் தரம். சாம் சி.எஸ்வின் பின்னணி இசை படத்திற்கு பலம். குறிப்பாக அமானுஷ்யங்கள் நடக்கும்போது வரும் அந்த வினோத ஒலி பார்வையாளர்களுக்கு திகிலூட்டுகிறது.
மொத்தத்தில் நல்லதொரு திகில் அனுபவம் தரும் படம். அந்த ஆங்கில படத்தை பார்த்தவர்களுக்கு சுமாராகத் தெரியலாம்.