தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிராக மனித உரிமைக்காக போராடுகிறவர் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்). இந்த நிலையில் போதைப் பொருள் பிரச்சினை குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதுகிறார் அரசுப் பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன். இதற்கு காரணமான ரவுடிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொல்கிறார் ரஜினி. சென்னைக்கு மாறுதலாகி வரும் துஷாரா விஜயன், மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழக்கிறார். இந்தக் கொலையை செய்தது யார் என்று கண்டுபிடித்து, அவரை என்கவுன்டர் செய்ய முடிவு செய்யும் ரஜினி, சென்னை வருகிறார். அவர் அதை நிறைவேற்றினாரா? என்பதுதான் படத்தின் கதை.
’ஜெய் பீம்’ படம் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ வெற்றியுடன் இருக்கும் ரஜினியும் கைகோத்துள்ள படம். ’ஜெய்பீம்’ மூலம் லாக்அப் மரணத்தை பற்றிய உண்மைக் கதையை தழுவி அதை உணர்வுபூர்வமாகவும், ஜனரஞ்சமாகவும் சொல்லி வெற்றி பெற்ற ஞானவேல் தற்போது போலி என்கவுன்டர் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் 20 நிமிடம் ரஜினியை மாஸாக காட்டி அவரது ரசிகர்களை திருப்பதி படுத்தும் ஞானவேல் அதன் பிறகு தனது கதைக்குள் வருகிறார். துஷாராவின் பின்னணி, தொடர்ந்து அவரது மரணம், அதன் பிறகான விசாரணை என படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துகொண்டே செல்கிறது. முதல் பாதியில் வேகமாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறது. அவ்வப்போது ரஜினிக்காகவே வைக்கப்பட்ட சில மசாலா காட்சிகள் எடுபடவில்லை. என்கவுண்டரை அடிப்படையாகக் கொண்டு நகரவேண்டிய கதையில் இப்படியான காட்சிகளை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
ரஜினி வழக்கமான் ஸ்டைலை தாண்டி தனது நடிப்பு பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார். செய்த தவறுக்காக குற்ற உணர்ச்சியில் உழலும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரஜினிக்கு அடுத்தபடியாக படம் முழுக்க தனது வசீகர நடிப்பால கவர்வது ‘பேட்ரிக்’ என்ற கதாபாத்திரத்தில் வரும் பஹத் பாசில். படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்டர்கள் ரசிக்க வைக்கின்றன. ஓய்வுபெற்ற நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன் தனது அனுபவ நடிப்பால் ஈர்க்கிறார். துஷாரா விஜயன், ரித்திகா சிங் இருவருக்குமே வலுவான கதாபாத்திரம். இருவருமே அதை நிறைவாக செய்துள்ளனர். மஞ்சு வாரியருக்கும், ராணா டகுபதிக்கும், கிஷோருக்கும், அபிராமிக்கும் அதிக வாய்ப்பில்லை.
படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது போலீஸ் என்கவுன்டரை நியாயப்படுத்துவது போன்ற வசனங்கள் வருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடரப்பட்டது. ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் படத்தில் தெளிவான பதிலை கொடுத்தது சிறப்பு. படத்தின் குறைகளை தாண்டி படம் பேசியுள்ள கருத்து மிக முக்கியமானது. அதை ரஜினி என்ற ஆளுமையைக் கொண்டு பேசியிருப்பது வரவேற்கப்படவேண்டிய முயற்சி.