பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’. அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது:
கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த ‘பிளாக்’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன். முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை அழகாக படமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் பாலசுப்ரமணி இருந்தார். அந்த வகையில் ஸ்கிரிப்ட் படித்ததும் எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்தது.
இப்படி ஒரு அறிமுக இயக்குநர் வரும்போது அவர் மூலமாக இந்த கதையை ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற, எங்களுக்கு வசதியாக இருக்கின்ற அதே சமயம் ஒரு அறிமுக இயக்குநரின் எண்ணங்கள், பிரச்சனைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்ற ஏற்கனவே எங்களிடம் உள்ள ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை இந்த படத்தில் பயன்படுத்தினோம்.
கதையில் உள்ள சவால்களை சரியாக புரிந்து கொண்டு அதை அழகாக கையாண்ட கேமராமேன் கோகுல், இந்தக் கதை நடக்கும் இடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த மாதிரி இடத்தில் நடக்கிறது என்று சரியாக சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றிய கலை இயக்குநர் சதீஷ்குமார், மக்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி இந்த கதை சென்று சேர வேண்டும் என உழைத்த படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு மிகப்பெரிய தூணாக இருக்கும் பின்னணி இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர்.
இந்தக் கதையை இயக்குநர் பாலா பலரிடம் கூறியுள்ளார். அதேசமயம் ஜீவாவிடம் முயற்சித்து பார்க்கலாம் என நினைத்தோம். அவர் கொஞ்சம் லைட்டான கதைகளை தேடிக் கொண்டிருந்தபோது, இருந்தாலும் முயற்சித்து பார்க்கலாமே என அவரிடம் இந்த கதையை சொன்னோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இந்த ஜானர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதை நான் பண்றேன் என உடனடியாக ஒப்புக்கொண்டார். இவ்வளவு வலுவான ஒரு கதையை ஒரு புதுமுக இயக்குநரை நம்பி அவர் ஒப்புக்கொண்டு வந்தது மிகப்பெரிய விஷயம்.
நாயகி பிரியா பவானி சங்கர் இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்துவிட்டு, எனக்கு ஒன்றும் பெரிதாக புரியவில்லை, இருந்தாலும் உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உடனே கிளம்பி வந்தார். அவரது நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு இந்த படம் வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களை நிச்சயம் இந்தப் படம் குழப்பாது. அனைவருக்குமே இந்த படம் புரியும். ஆனால் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் இந்த கதை சென்று சேர்ந்து இருக்கும். என்றார்.
நாயகன் ஜீவா பேசியதாவது: இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்து விட்டது. காரணம் பல ஹீரோக்களிடம் சொல்லி அதில் சின்ன சின்ன மாறுதல்களை அழகாக செய்து என்னிடம் வரும்போது ஒரு முழுமையான கதையாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இதில் எந்த திருத்தமோ மாறுதலோ சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. இது ஒரு மைண்ட் ட்விஸ்ட்டிங் ஆன கதை. வலது மூளை இடது மூளை என இந்த படத்தில் சொல்வதைப் பார்க்கும்போது மக்களுக்கு அவர்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் என நினைக்கிறேன். குறிப்பாக இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்வதுடன் அவர்களது மூளைக்கும் வேலை வைக்கும். இதை சைக்காலஜிக்கல் திரில்லர் என சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது ஹாரர் படமோ என்கிற சந்தேகம் கூட படம் பார்ப்பவர்களுக்கு தோணும்.
விவேக் பிரசன்னாவின் காட்சிகள் தான் இந்த படத்தில் ரொம்பவே முக்கியமானவை. படம் பற்றி ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கான விடைகள் அவரது கதாபாத்திரத்தில் தான் இருக்கின்றன. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்றார்கள். ஆனால் அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. காரணம் அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணுவோம் என நினைத்து தேவையில்லாமல் எதுவும் பண்ணி விடக்கூடாது என்பதால் தான். இந்த படம் பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலும் இரவு நேர படப்பிடிப்பாகத்தான் நடத்தினோம்.
நான் சினிமாவிற்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன். அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும். பொதுவாகவே நான் திரில்லர் படங்களின் ரசிகன். பாலா இந்த கதையை அற்புதமாக கையாண்டு உள்ளார். படத்தில் மிக சில கதாபாத்திரங்கள் தான். ஆனாலும் ரசிகர்களை நன்றாக பொழுது போக்க செய்வார்கள். பல படங்களை தியேட்டர்களில் பார்க்கும்போது படம் ஒரு பக்கம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.. ரசிகர்களின் செல்போன்கள் வெளிச்சமாக இருக்கும். அப்படி அவர்கள் கவனத்தை சிதற விடாமல், ஒரு காட்சியை தவறவிட்டாலும் அடுத்து இது ஏன் நடந்தது என தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக தொடர்ந்து பார்க்கும் விதமாக இந்த படம் இருக்கும்.
தயாரிப்பாளர் பிரபு சார் தரப்பிலேயே சூர்யா, கார்த்தி என ஹீரோக்கள் இருக்கும்போது என்னை நம்பி இப்படி ஒரு வலுவான கதையை கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. அவருடன் இணைந்து இதுபோன்று இன்னும் பல படங்கள் பணியாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.