பாகுபலி, பாகமதி என்று பெரிய பட்ஜெட்டில்தான் பேண்டசி த்ரில்லர் படம் தர முடியுமா? சின்ன பட்ஜெட்டிலும் தர முடியும் என்று வந்திருக்கிற படம்தான் ‘ஆரகன்’.
கதையின் நாயகன் மைக்கேல் தங்கதுரை, நாயகி கவிபிரியா மனோகரனை காதலிக்கிறார். வேலையில்லாமல் தவிக்-கும் மைக்கேலுக்கு தனியா தொழில் தொடங்க 4 லட்சம் ரூபாய் வேண்டும். இதற்காக குன்னூர் அருகே ஒரு மலையில் தனியான வீட்டில் வசிக்கும் வயதான ஸ்ரீரஞ்சனியை பராமரிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டு செல்கிறார் காதலி கவிபிரியா.
சென்ற இடத்தில் தான் அவருக்கு தான் பெரிய ஒரு சதி வலைக்குள் தள்ளப்பட்டிருப்பது தெரியவருகிறது. அது என்ன மாதிரியான சதி வலை, அதிலிருந்து அவர் தப்பித்தாரா? காதலன் மைக்கேல் அவரை காப்பாற்றினாரா? என்பதுதான் படத்தின் கதை. இந்த கதையை இப்படித்தான் சொல்ல முடியும். ஆனால் வேற கதை. அது த்ரிலிங்கான அனுபவத்தை தரக்கூடியது.
செவி வழியாக சொல்லப்படும் ஒரு வரலாற்று பின்னணி கதையோடு, நிகழ்கால சமூக காதல் கதை ஒன்றையும் இணைத்து இரண்டரை மணி நேரம் பரபரவென ஒரு படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் அருண் கே.ஆர். நாயகனாக நடித்திருக்கும் மைக்கேல் தங்கத்துரை அப்பாவி, அடப்பாவி என இரு வேடங்களில் மிரட்டுகிறார். நாயகி கவிப்ரியாவை சுற்றித்தான் கதை நடக்கிறது. படத்தின் மொத்த சுமையையும் தாங்கிப் பிடித்துள்ளார். இதுரை ஏற்றிராத ஒரு கேரக்டரில் ஸ்ரீரஞ்சனி கவனம் பெறுகிறார். கலைராணி பொதுவாக ஓவர் ஆக்டிங் செய்கிறவர். இந்த படத்தில் அது கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
விவேக் மெர்வின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றாலும் சில காட்சிகளில் வசனத்தை கூட கேட்கவிடாமல் செய்து விடுகிறார். சூரியா வைத்தியின் ஒளிப்பதிவு பெரிய பட்ஜெட் படத்திற்காக லுக்கை தருகிறது. எளிமையான கிராபிக்ஸ் காட்சிகள் கதையோடு பொருந்திப்போவதால் அதையும் ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் வீக் எண்ட் என்டர்டெயின்மெண்டாக வந்திருக்கிறான் ஆரகன்.