ஹீரோவாக மாறி இருக்கும் காமெடியன் சதீஷ் நடித்துள்ள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம். கதையின் நாயகன் சதீஷ் ஏற்காடு மலைப்பாதையில் பதற்றமாக காரினை ஓட்டிச்செல்லும்போது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிளில் வரும் ஒருவர் மீது மோதிவிடுகிறார். சம்பவ இடத்திலே அவர் உயிரிழக்க, பதற்றத்தில் சடலத்தை தன் கார் டிக்கியில் மறைத்து வைத்து பயணத்தைத் தொடர்கிறார்.
இந்த நிலையில் போலீஸ் செக் போஸ்டில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக மாட்டிக்கொள்கிறார். அதே இரவில் ஏற்காடு ரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன சதீஷ் யார்? விபத்தில் இறந்தவன் யார், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதுதான் படத்தின் கதை.
தனது வழக்கமான நகைச்சுவை பாணியிலிருந்து விலகி, சீரியசாக நடித்திருக்கிறார் சதீஷ். அடாவடி காவல்துறை அதிகாரியாக மிரட்டுகிறார் பாவேல் நவகீதன். அவருடன் அதிகார மோதலில் ஈடுபடும் விசாரணை அதிகாரியாக அஜய் ராஜ் நடித்துள்ளார். சிறியதொரு பாத்திரத்தில் வித்யா பிரதீப் கொடுத்த பணியினைச் செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகளாக மைம் கோபி, ராமதாஸ் கவனிக்க வைக்கிறார்கள்
பனிமூடிய இரவுக் காட்சிகள், திரைக்கதையின் அழுத்தத்தை அதிகரிக்கும் காட்சி கோணங்கள் என ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா திரில்லரை அதிகப்படுத்தி இருக்கிறார். செயற்கையாக நீளும் இரண்டாம் பாதியின் கோர்வை அயற்சியைத் தருகிறது. படத்தின் பிளாஷ்பேக்கில் கவனம் செலுத்தி இருந்தால் படம் கவனிக்கப்பட்டிருக்கும்.