‘இடி மின்னல் மழை’ படத்தை இயக்கிய திரவ் இயக்கி நடித்துள்ள படம் ‘டோபாமைன் 2.22.’ அவருடன் நிகிலா, விஜய், விபிதா, ராகவ், சாம்சன், சத்யா, சக்திவேலன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அலன் ஜோஷி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் திரவ் கூறும்போது “செல்போன் என்பது அருமையான கண்டுபிடிப்பு ஆனால் அதனை நல்லவிதமாக பயன்படுத்துவதை விட தவறாக பயன்படுத்துவதுதான் அதிகரித்துள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்த படம் பேசுகிறது. செல்போனே வேண்டாம் என்று சொல்லவில்லை. அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்கிறோம்.
இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற ஒரு பெண்ணை ரசிகன் என்ற பெயரில் ஒருவன் டார்ச்சர் செய்கிறான், ஆபாச வீடியோக்கள் பார்க்கும் ஒருவன் ஒரு பெண்ணை காதலிப்பதாக நடித்து நண்பர்களுக்கு விருந்தாக்குகிறான், அடிக்கடி செல்போனில் விளையாடும் சிறுவன் அதற்கு அடிமையாகி சொந்த அம்மாவையே தாக்கும் நிலைக்கு வந்து விடுகிறான். இப்படியான பல சம்பவங்களின் தொகுப்பாக இந்த படம் உருவாகி உள்ளது.
சிறிய பட்ஜெட் படம் என்பதால் தியேட்டரில் வெளியிடவில்லை. தியேட்டரும் கிடைக்காது அதனால் அமேசான், ஆஹா, சிம்ளிசவுத் ஆகிய தளங்களில் வெளியிட்டுள்ளோம். என்றார்.