‘ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தனித்து களமிறங்கியுள்ள படம் ‘தேவரா: பார்ட் 1’. மாஸ் பட இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி உள்ளார்.
செங்கடல் அருகே உள்ள நான்கு கடலோர கிராமங்கள். அவற்றின் தலைநகரம் ரத்னகிரி. அந்த கிராமங்களுக்கு தலா ஒரு தலைவர். அதில் ஒரு தலைவராக இருப்பவர் தேவரா என்கிற ஜூனியர் என்டிஆர். அனைவராலும் மதிக்கப்படக்கூடிய தேவரா சொல்வதை மற்ற கிராமத்தினரும் கேட்கின்றனர்.
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் கடல்வழியாக கொள்ளை அடித்துச் சென்றதை மீட்ட இந்த கிராம மக்கள் இப்போது அரசியல்வாதி ஒருவர் சொல்லும் கடத்தல் வேலையை என்ன ஏது என்று கேட்காமல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒருகட்டத்தில் தாங்கள் செய்வது ஆயுதக் கடத்தல் என்பது தெரிய வருகிறது. இதற்கு தேவரா எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்றவர்களையும் இனி அந்த வேலையை செய்யக் கூடாது என தடுக்கிறார்.
இன்னொரு கிராமத்தின் தலைவரான சைஃப் அலிகான்க்கு இது பிடிக்கவில்லை. இதனால் மற்ற ஊர் தலைவர்களுடன் சேர்ந்து தேவராவை தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறார். இதனை அறிந்துகொள்ளும் தேவரா அங்கிருந்து தப்பித்துச் சென்று விடுகிறார். பல ஆண்டுகள் கழித்து தேவராவின் மகன் வரா என்கிற ஜூனியர் என்டிஆர் தந்தையை போல் இல்லாமல் கோழையாக வளர்கிறார். தந்தைக்கு எதிராக மகனையே கொண்டு வந்து நிறுத்துகிறார் சயிப் அலிகான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
படத்தில் ஹீரோவின் அறிமுகக் காட்சி ‘சுறா’ படத்தில் வந்த விஜய் நினைவூட்டுகிறது. ஹீரோவாக டபுள் ரோலில் ஜூனியர் என்டிஆர். கேரகடரிலும் சரி, கெட்அப்பிலும் சரி பெரிய வித்தியாசம் காட்டவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் பண்ணுகிறார். வில்லனாக சைஃப் அலி கான் மிரட்டுகிறார். ஜான்வி கபூர் ஹீரோயினுக்கு என்ன வேலையோ அதை செவ்வனே செய்திருக்கிறார்.
படத்தின் பெரிய பலம் ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் அனிருத்தின் இசையும். இவர்கள் இருவருமே படத்தை தூக்கி நிறுத்துகின்றனர். ஹீரோயிசத்தையும், தொழில்நுட்ப அம்சங்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு ரசிகர்களை எண்டர்டெயின்ட் செய்யும் படம்.