பிறந்து, வளர்ந்த தன் சொந்த ஊரிலிருந்து சொத்து பிரச்சினை காரணமாக வீட்டை காலி செய்து குடும்பத்துடன் சென்னை வருகிறார் அரவிந்த்சாமி தன் தங்கையின் திருமணத்துக்காக 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார். அங்கே ‘அத்தான் அத்தான்’ என அன்பை பொழிந்து அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து மகிழ்கிறார் கார்த்தி.
அவர் யார், என்ன உறவு என்பதெல்லாம் அரவிந்த்சாமிக்கு தெரியாது. அவர் பெயர் கூட தெரியாது. என்றாலும் கார்த்தியின் அன்பு அரவிந்த்சாமியை அசர வைக்கிறது. கண்ணீர் சிந்த வைக்கிறது. கார்த்தியும், அரவிந்த்சாமியும் யார்? இருவருக்குள்ளும் அப்படி என்ன உறவு என்பது படத்தின் மீதிக்கதை.
96 படம் போலகே காலம் மறைத்துபோட்ட அன்பை மீட்டெடுத்திருக்கிறார் பிரேம்குமார்.அரவிந்த் சாமிக்கும் அவரது தங்கைக்குமான காட்சி கலங்க வைக்கிறது வீடும், நிலமும், பறவைகளும், விலங்குகளும், சைக்கிளும் தனி கதாபாத்திரங்களாகவே படம் முழுக்க தொடர்வது இயக்குநர் டச். ‘96’பட போஸ்டர், தோனி பெயரை பச்சை குத்தியிருப்பது, பெரியார் பபடம், கருப்பு பேட்ஜ் என கிடைத்த கேப்பில் எல்லாம் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார் பிரேம்குமார்.
மனதில் தேக்கி வைத்த உணர்வுகளை முக பாவனைகளில் கொண்டு வரும் ஆர்பாட்டமில்லாத நடிப்பால் கவர்கிறார் அரவிந்த்சாமி. வெள்ளந்தியான மனிதராக, அன்பின் உறைவிடமாக, சின்ன சின்ன உடல்மொழியில் கலகலப்பூட்டி ரசிக்க வைக்கிறார் கார்த்தி. இவர்களின் ஜோடிப் பொருத்தம் சூப்பர்.
கார்த்தி மனைவியாக வரும் ஸ்ரீதிவ்யா சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகிறார். ராஜ்கிரண் நடித்திருந்தாலும் பழைய ராஜ்கிரணை பார்க்க முடியவில்லை. ஜெயப்பிரகாஷ். தேவதர்ஷினி, ஸ்வாதி, சரண் சக்தி, கருணாகரன், இளவரசு தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையில் உமாதேவி வரிகளில் கமல் குரலில் ஒலிக்கும் “யாரோஞ்இவன் யாரோ” பாடல் உருகவைக்கிறது. மற்ற பாடல்கள் சோபிக்கவில்லை. பின்னணி இசை பிரமாதம். தஞ்சாவூரின் பசுமையையும், பாசத்தையும் ஜெயராஜுவின் கேமரா அழுகியலுடன் பதிவு செய்துள்ளது.
படத்தின் நீளத்தை மட்டும் -குறைத்திருந்தால் கூடுதல் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.