அம்மாவின் கள்ளக் காதலால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் கோழிப்பண்ணை வைத்திருக்கும் யோகிபாபு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறார். கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான் செல்லதுரை. அவரை, அருகில் பானைக்கடை வைத்திருக்கும் தாமரைச்செல்வி காதலிக்கிறார். தங்கையை ஆளாக்கும் சூழ்நிலை காரணமாக காதலை புறக்கணிக்கிறார் செல்லத்துரை.
இந்நிலையில் தன் கல்லூரியில் அறிமுகமாகும் ஒருவருடன் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. அம்மாவைப்போல தங்கையும் மாறிவிடுவாளோ என பயப்படும் செல்லத்துரை காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு துயரமானது என்பதை அழுத்தமாக பதிவு செய்யும் படம் இது. செல்லத்துரை தாமரை செல்வி காதலை ஏற்காமல் இருப்பதற்கும், தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு காட்டுவதற்கும் வலுவான காரணம் இல்லை. அதனால் இரண்டுமே பெரிதாக ஈர்க்கவில்லை. தவறு செய்த தாயையும், தந்தையையும் மீண்டும் அரவணைப்பதும் ஏற்கும்படியாக இல்லை.
ஏகன் சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கை மீதான பாசம், தன்னை அவமானப்படுத்த முயல்வோரிடம் காட்டும் கோபம், சக மனிதர்கள் மீதான அன்பு என அனைத்தையும் யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். யோகிபாபு சென்டிமென்ட் நடிப்பில் ரசிக்க வைக்கிறார். ஜெயசுதா, பிரிகிடா சகா இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ரகுநந்தனின் பின்னணி இசையும், அசோக்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். வெறும் சென்டிமெண்டை நம்பி ஒரு படம் தந்திருக்கிறார் சீனு ராமசாமி.