2028ல் நடப்பது மாதிரியான வார் பேண்டசி கதை. ஐ.நா.சபையில் இருந்து விலகி, சீனாவும் ரஷ்யாவும் ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் இணையாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. இதனால் இந்தியாவை பணிய வைக்க நினைக்கிறது சீனா. இதற்காக இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்புகிறது.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் நாசர், ஊழல்வாதியான அவரது மைத்துனர் நடராஜ் ஆட்டி வைப்பதற்கேற்ப ஆட்சி நடத்துகிறார். இன்னொரு பக்கம் முதல்வரின் மகள் ஹிப்ஆப் ஆதியை காதலிக்கிறார். இதனால் அவரை தீவிரவாதி என்று கூறி தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார் நட்ராஜ். இந்த கதைகள் ஒரு புள்ளியில் இணையும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
எல்.ஐ.சி., சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் போன்ற சென்னையின் முக்கிய அடையாளக் கட்டிடங்கள் மீது போர் விமானங்கள், குண்டு வீசித் தாக்கும் தொடக்கக் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை பரபரவென தடதடக்கிறது படம். போர் சூழலுக்கு பிறகு அனைவரின் கேரக்டரும் மாறுவது மனித மனத்தில் மாறுபாடு. ஆதிக்கும் அனகாவுக்குமான காதல் உருவாவதும், பின்பு காணமாமல் போவதும் கடைசியில் இணைவதுமாக கடந்து செல்கிறது. விஎப்எக்ஸ் காட்சிகள் கச்சிதமாக அமைந்திருக்கிறது.
இப்படி எல்லாம் நடக்குமா? என்று லாஜிக்காக யோசிக்காமல் நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் படம் சுவாரஸ்யமாக இருக்கும்.