கத்துகுட்டி, உடன்பிறப்பே என கவனம் ஈர்த்த இரண்டு படங்களை இயக்கிய இரா.சரவணனின் அடுத்த படம் ‘நந்தன்’. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட ‘தனி’ தொகுதிகள் ஆதிக்க சாதிகளின் கைகளுக்குள் அடைக்கலமாகி, அதிகார பலமிழந்து கிடக்கும் அவலத்தை திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் வணங்கான்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) இவர் குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்கள். அதனை ‘கவுரமாக’ கருதும் கோப்புலிங்கம், மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்துக்கு வர விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த சூழலில் தான் வணங்கான்குடி பஞ்சாயத்து ‘தனி’ தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் கோபமடையும் கோப்புலிங்கம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தன் வீட்டு பணியாளர் அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவராக்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
தனி சுடுகாடு, பிசிஆர் சட்டம், சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி, கல்வியின் முக்கியத்துவம் என பல விஷயங்களை பேசுகிறது படம். “ஆள்றதுக்கு தான் அதிகாரம் தேவைனு நினைச்சிட்டு இவ்ளோ நாள் ஒதுங்கியே இருந்தோம். இப்போதான் தெரியுது, இங்க வாழுறத்துக்கே அதிகாரம் தேவைனு” போன்ற வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.
வழக்கத்துக்கு மாறான உடல் மொழியாலும், சதா வெற்றிலையை மென்று பேசும் அப்பாவித்தனத்தாலும் தான் சார்ந்த கதாபாத்திரத்துக்கு நடிப்பால் நியாயம் சேர்க்கிறார் சசிகுமார். வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் பாலாஜி சக்தவேல். சசிகுமாரின் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஜிப்ரான் இசையும். ஆர்.வி.சரவணனின் ஒளிப்பதிவும் பெரிதாக ஈர்க்கவில்லை.
பெரிய அளவில் பேசப்படாத ஒரு பிரச்சினையை திரையில் தைரியத்துடன் பேசியிருக்கும் இயக்குனரின் நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால் தரமான சினிமா மொழியில் தரத் தவறியிருக்கிறார்.