‘லப்பர் பந்து’ விமர்சனம்: ஜாதியை அடித்து நொறுக்கும் இரும்பு பந்து

கிராமத்து கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளது. அவற்றிலிருந்து மாறுபட்ட தனித்து நிற்கிறது இந்த லப்பர் பந்து.

கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் டிஎஸ்கே, தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி அன்புவை அணியில் வேண்டா வெறுப்பாக சேர்த்துக் கொள்கிறார். அதே போட்டியில் எதிரணியில் பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் கெத்து அட்டகத்தி தினேஷ் பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞனாக இருக்கும் அன்பு, யாரென்று தெரியாமலேயே கெத்து மகளை காதலிக்கிறார். ஒரு போட்டியில் தற்செயலாக கெத்து – அன்பு இருவரும் மோதும்போது இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சினை வெடிக்கிறது. இந்த ஈகோ பிரச்சினை இருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. இருவரும் அந்த சிக்கல்களிலிருந்து மீண்டது எப்படி ஹரிஷ் காதல் என்ன ஆனது என்பது படம்.

தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு ஆடப்படும் ரப்பர் பந்து கிரிக்கெட் பின்னணியில் ஒரு எளிமையான கதையை பிடித்து, அதற்கேற்ற ஒரு வலுவான திரைக்கதையை உருவாக்கி ஒரு முழுமையான படைப்பை கொடுத்திருக்கிறார். படத்தின் எந்த இடத்திலும் இது ஒரு புதுமுக இயக்குநரின் படம் என்ற சாயல் எங்குமே தெரியவில்லை. தனது முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து ஜெயித்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

அட்டகத்தி தினேஷ். ஈகோ தலைக்கேறிய நபராகவும், அதே நேரம் மனைவி, மகளிடம் அடங்கிப் போகும் குடும்பத் தலைவனாகவும் கலக்கியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார்.. ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவருக்குமே படத்தில் முக்கியமான வேடம். பால சரவணன் காமெடி «சரவெடி ரகம். ஜென்சன் திவாகர் குடிகாரன் கேரக்டரில் கலக்குகிறார்.

கிரிக்கெட் காட்சிகளில் நிஜ போட்டியை பார்ப்பதைப் போல நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்து பரபரப்பாக்குகிறது தினேஷ் புருஷோத்தமனின் கேமரா. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்துக் கொண்டு வந்திருக்கிறது. இந்த லப்பர் பந்து.
=================

Leave A Reply

Your email address will not be published.