தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள் : ‘பேட்ட ராப்’. தயாரிப்பாளர் ஜோபி பி. சாம்
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பேட்ட ராப்’. வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். வருகிற 27ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் ஜோபி பி சாம் பேசுகையில், ” என் தொழில் சார்ந்த வாழ்க்கை தமிழகத்திலிருந்து தான் தொடங்கியது. 2000 ஆண்டில் ஸ்ரீ பெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணியின் போது பிரபலமான தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினேன். அந்தத் தருணத்தில் ஏராளமான தமிழர்கள் எனக்கு நண்பர்களாக கிடைத்தார்கள். இதை தொடர்ந்து தற்போது தமிழில் திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறேன்.
தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்தில் முதன் முதலாக பணியாற்றத் தொடங்கி எனக்கு நண்பர்கள் கிடைத்த மாதம் செப்டம்பர். அதே செப்டம்பர் மாதத்தில் தமிழில் முதன் முதலாக தயாரித்த ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் வெளியாகிறது. இதனை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும். எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
பிரபுதேவா பேசியதாவது: இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம்.. என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருந்தது.
இமான் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் எனக்கு அவர் ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன். அவருடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் பாசிட்டிவ்வானவர். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார்.
நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன்.
வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா. அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
=============