2015ம் ஆண்டு வெளியான ‘டிமாண்டி காலனி’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில், டிமாண்டி காலனியில் உள்ள மர்ம வீட்டிலிருந்து தப்பிக்கும்போது அருள்நிதி இறப்பதுபோல காட்டிவிட்டு இந்த பாகத்தில் அவரை உயிர் பிழைக்க வைக்கிறார்கள். அவரை பிரியா பவானி சங்கரும், அவரது தந்தை அருண் பாண்டியனும் காப்பாற்றுகிறார்கள் ஆனால் அவர் கோமாவில் இருக்கிறார்.
அவருடைய சகோதரர் ரகு (இன்னொரு அருள்நிதி) தந்தையின் சொத்து தனக்கு மட்டுமே வர வேண்டும் என்று நினைத்து கோமா அருள்நிதியை கொல்ல நினைக்கிறார். இன்னொரு பக்கம் தனது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் பிரியா பவானி சங்கர் அதைப் புத்தத் துறவி உதவியுடன் கண்டுபிடிக்க போராடுகிறார். இந்த மூவரின் கதையும் ஒரு புள்ளியில் இணையும்போது டிமாண்டி தீய சக்தியும் விழித்துக் கொள்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
முதல் பாகத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இரண்டாம் பாகப் படங்கள் வரும் காலத்தில், முதல் பாகத்தின் முடிவிலிருந்து கதையைத் தொடங்கியதோடு இடையிடையே இரண்டு கதையையும் இணைக்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவைப் பாராட்டலாம். பேய்ப் படங்களுக்கே உரிய கோரமான மேக்அப், பயமுறுத்தும் காட்சிகளை நம்பாமல் திரைக்கதையிலேயே மிரட்டி இருக்கிறார்கள். இந்த பாகத்தில் எழும் சில லாஜிக் கேள்விகளுக்கு அடுத்த பாகத்தில் விடை கிடைக்கலாம்.
நாயகன் அருள்நிதிக்கு இரட்டை வேடமாக இருந்தாலும் ஒரு கதாபாத்திரத்துக்குத்தான் வேலை கொடுத்திருக்கிறார்கள். அதை அழகாகச் செய்திருக்கிறார். கணவரை இழந்து வாடும் பாத்திரத்திலும், துப்பறியும் பாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். த்ரில்லர் படத்துக்குரிய இசையைச் சரியாக வழங்கியிருக்கிறார் சாம் சி.எஸ். ஹரீஸ் கண்ணனின் ஒளிப்பதிவு திகில் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.
பேய் பட ரசிகர்களுக்கு பெரிய விருந்து.