பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான நிகில் அத்வானி இயக்கத்தில் ஆக்ஷன் ஹீரோ ஜான் ஆபிரகாம் நடித்துள்ள படம். வட மாநிலங்களில் நிலவும், ஜாதி வெறி, தீண்டாமையை பரபர ஆக்ஷன் களத்தில் சொல்கிறது படம்.
இந்திய ராணுவத்தின் உளவுபிரிவு அதிகாரி ஜான் ஆபிரகாம், பத்திரிகையாளரான அவரது மனைவி தமன்னாவை கழுத்தை அறுத்து கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதியை தேடிச் செல்கிறார். அவனை உயிரோடு கொண்டு வர உத்தரவிடுகிறது அரசு. ஆனால் மனைவியை கொன்ற அவனை கழுத்தறுத்து கொல்கிறார். இதனால் அரசு பணிநீக்கம் செய்கிறது.
இதனால் ஒரு கிராமத்தில் உள்ள கல்லூரிக்கு குத்துச் சண்டை பயிற்சியாளராக வருகிறார், அந்த ஊரில் ஜாதி கொடுமையும், தீண்டாமையும் தலைவிரித்தாடுகிறது. குத்துச் சண்டை கற்க விரும்பும் உள்ளூர் தலித் மாணவி ஷர்வாரியை அங்குள்ள ஜாதி வெறி தடுக்கிறது. இதில் தலையிடும் ஜான் ஆபிரகாமை 100 கிராமங்களின் தலைவனான வில்லன் அபிஷேக் பானர்ஜி அழிக்க நினைக்கிறார். இருவருக்குமான போராட்டத்தில் யார் வெல்கிறார்கள் என்பதுதான் கதை.
பக்கா கமர்ஷியல் களத்தில் இப்படியான ஒரு படத்தை தந்திருக்கும் நிகில் அத்வானியின் துணிச்சல் பாராட்டுக்குரியது. ஜான் ஆபிரகாம் 6 அடி உயிர ஜிம் பாடியை வைத்துக் கொண்டு பண்ணும் ஆக்ஷன் அதகளம் படத்தை விறுவிறுப்பாக்குகிறது. ஷர்வாரி பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காஜல் அகர்வால் சில காட்சிகளே வந்தாலும் அனுதாபத்தை அள்ளிச் செல்கிறார்.
ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டுமல்ல சமூக அக்கறை கொண்ட ரசிகர்களுக்குமான தரமான படம்.