ஆனந்த் என்ற இளைஞனின் பள்ளி பருவம், கல்லூரி பருவம், காதல், காதல் தோல்வி, வேலையில்லா திண்டாட்டம், அவமானம், அனைத்தையும் தாண்டி கடைசியாக ஜெயிக்கும் காதல், நட்பு என ஒரு பயணமாக அமைந்திருக்கும் படம்.
நடுத்தர குடும்பத்து படித்த இளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களை தனது உணர்வுகளின் மூலம் நன்றாக தந்துள்ளார் ஆனந்த். அவரே படத்தை இயக்கியும் உள்ளார். காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்தவுடன் அடையும் வேதனைகளை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார். ஒரு சராசரி தமிழ் பெண்ணின் பிரதிபலிப்பாக இருக்கிறார் பவானி ஸ்ரீ.
என்ன கஷ்டம் வந்தாலும் தன் மகன்களுக்கு தெரிய கூடாது, நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என நினைக்கும் பல்வேறு அப்பாக்களை நடிப்பில் கண்முன் கொண்டு வருகிறார் இளங்கோ குமரவேல். நண்பர்களில் ஆர்ஜே.விஜய்யும், வினோத்தும் கவனம் ஈர்க்கிறார்கள்.
நட்பு என்பது கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல. தோள் கொடுக்கவும்தான் என்கிறது இப்படம். காதல் என்பது ஈர்ப்பு மட்டுமல்ல. பரஸ்பர புரிதல், திட்டமிடல், நான் உனக்காக காத்திருக்கிறேன் என்று புரிய வைப்பதும்தான் என்கிறது படம்
காசிப்பின் இசை மனதை வருடுகிறது. இடையிடையே ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை பயன்படுத்தி இருப்பதும் இதம். இளைஞர்கள் இணைந்து இளைஞர்களுக்காக உருவாக்கி உள்ள படம்.