மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்: எல்லோருக்கும் பிடித்தமானவன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி உள்ள படம். முதன் முறையா விஜய் ஆண்டனி சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ள படம்.இந்திய ராணுவத்தின் ரகசிய பாதுகாப்புப் படையில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, தனது உயர் அதிகாரி சரத்குமாரின் தங்கையைக் காதல் திருமணம் செய்கிறார். ஒரு மழைநாளில் எதிரியின் தாக்குதலில், மனைவியுடன் சேர்ந்து அவரது நண்பர்களும் கொல்லப்படுகிறார்கள். அந்த எதிரியிடமிருந்து விஜய் ஆண்டனியை காப்பாற்ற அவரும் இறந்துவிட்டார் என்ற தகவல் பரப்பப்படுகிறது.

உயிருக்குப் போராடிய அவரைக் காப்பாற்றிய சரத்குமார், அவரை யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு அழைத்துச் சென்று ஒரு தீவில் விட்டுவிட்டு முந்தைய அடையாளங்களை மறந்து வாழும்படி கூறிவிட்டு வருகிறார். ஆனால் அந்த ஊரில் வில்லத்தனம் செய்து வரும் டாலி தனஞ்ஜெயாவுடன் மோத வேண்டிய சூழ்நிலை அவருக்கு வருகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பிலும், பாடிலாங்குவேஜிலும் முன்பு போலவே நடித்துள்ள விஜய் ஆண்டனி, ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார். சரண்யா பொன்வண்ணனுடனான பாசத்தில் மனதைக் கவர்கிறார். மேகா ஆகாஷ் இயல்பாக நடித்துள்ளார். வில்லன் டாலி தனஞ்செயா, போலீஸ் அதிகாரி முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பர், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், இயக்குனர் ரமணா ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

தீயவனை அழிக்க வேண்டாம், தீமையை அழிக்க வேண்டும் என்ற மெசேஜ் சொல்கிறது படம். விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணியுடன் 5 பேர் இசை அமைத்துள்ளனர். பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகளை வலுவாக்கியுள்ளது. ஆக்ஷன் பிரியர்களுக்கு ஆடி மாத விருந்து.

Leave A Reply

Your email address will not be published.