தமிழில் வெளிவந்திருக்கும் சர்வைவல் பாணி திரைப்படம். ஒரு படகில் கடலுக்குள் தப்பிச் செல்லும் சில மனிதர்களைப் பற்றிய உணர்வுபூர்வமான கதை . சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மெட்ராஸைப் பூர்விகமாகக் கொண்ட குமரன் (யோகிபாபு) தனது பாட்டியுடன் சேர்ந்து, வெள்ளையரின் பிடியில் இருக்கும் தனது தம்பியை விடுவிக்க முயற்சிக்கிறார். அந்த சமயத்தில் சென்னையின் மீது ஜப்பான் குண்டுமழை பொழிவதால் அதிலிருந்து தப்பிக்க தனது படகில் கடலுக்குள் செல்ல முயல்கிறார். அவருடன் ஒரு தெலுங்கு கர்ப்பிணி பெண் (மதுமிதா), அவரது மகன், ஒரு எழுத்தாளர் (எம்.எஸ்.பாஸ்கர்), ஒரு பிராமணர் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் (கவுரி கிஷன்), ஓர் இஸ்லாமியர் (ஷா ரா), ஒரு வட இந்தியர் (சாம்ஸ்) உள்ளிட்டோரும் படகில் ஏறிக்கொள்கின்றனர். பாதி தூரத்தில் ஒரு வெள்ளைக்காரரும் ஏறுகிறார்.
படகில் ஏற்படும் சலசலப்பால் படகு சேதமடைகிறது. படகை கரைக்கு திருப்பவும் முடியாமல், மேற்கொண்டு நகரவும் முடியாத சூழலில் 3 பேர் கடலில் குதித்தால்தான் தப்பிக்க முடியும் என்கிற நிலை. இதனால் படகில் இருப்போர் சில முடிவுகளை எடுக்கின்றனர். அதேநேரம் படகில் ஒரு தீவிரவாதி மாறுவேடத்தில் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. அந்த தீவிரவாதி யார்? படகில் இருப்பவர்கள் இறுதியாக என்ன ஆனார்கள் என்பதே படத்தின் திரைக்கதை.
தனது முந்தைய படங்களாக ‘23-ஆம் புலிகேசிக், ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்க் போன்ற படங்களின் மூலம் அதிகாரத்தை, சமூகத்தை போகிற போக்கில் அட்டகாசமாக பகடி செய்த சிம்புதேவன், இந்த படத்திலும் அதையே செய்திருக்கிறார். ஒரு சர்வைவல் டிராமாவுக்கு தேவையான கச்சிதமான கதை இது. கூடவே நகைச்சுவை, சமூகத்தின் மீதான பகடி, எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கிண்டலாக கணிப்பது என பல முயற்சிகளை செய்திருக்கிறார்.
சிம்புதேவனின் முந்தைய படங்களிலும் எதிர்கால நிகழ்வுகளை பகடியாக பேசும் காட்சிகள் உண்டு. ஆனால் அவை கதையின் போக்கோடு வருவதால் அவை ரசிக்கும்படி இருந்தது. இந்த படத்திலும் பல சமூக நிகழ்வுகளை கிண்டல் செய்திருக்கிறார். யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா, மதுமிதா, கவுரி கிஷன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு வழக்கமாக காமெடி என்பதை தாண்டி அடக்கமான இயல்பான நடிப்பை தந்துள்ளார். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கடலின் அழகை பல வண்ணங்களில் மிக அழகாக காட்டியிருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம். தமிழ் சினிமாவில் இது புதிதான முயற்சி என்ற வகையில் கவனம் பெறுகிறது போட்.