சமீபத்தில் வெளிவந்த ‘அரண்மனை 4’ ரசிகர்களை ஏகத்துக்கு பயமுறுத்தியது. அது பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரான பேண்டசி படம். ஆனால் சிறிய பட்ஜெட்டில் கடுமையான உழைப்பை போட்டு வெளிவந்திருக்கும் ‘பேச்சி’யும் அதைப்போலவே மிரட்டி இருக்கிறது.
அரண்மனைக் காடு என்கிற மலை கிராமத்தில் சுற்றுலாவுக்கு வருகிறார்கள் காயத்ரி சங்கர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர். அவர்களை ட்ரெக்கிங் அழைத்துச் செல்கிறார் உள்ளூர் வன இலாகா ஊழியர் பால சரவணன். காட்டுக்குள் இருக்கும் ஆபத்தை அறியும் அவர் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார். அதையும் மீறி அந்த குழுவினர் செல்கிறார்கள். அப்படிச் சென்றவர்கள் பல ஆண்டுகளாக மரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பேச்சியை விடுவிக்கிறார்கள் அதன் பிறகு என்ன நடக்கிறது? பேச்சி யார்? என்பதுதான் படத்தின் கதை.
காமெடி நடிகரான பால சரவணன் இயல்பான ஒரு மனிதராக நடித்திருக்கிறார். படம் முழுக்க அவர் ரசிகர்களின் அனுதாபத்தை சம்பாதித்து விடுகிறார். மற்ற நடிகர்களில் காயத்ரி மட்டுமே தெரிந்த முகம். படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை சிடுசிடுவென இருக்கிறார். அதற்கு அவர் க்ளைமாக்ஸில் அவர் தரும் ட்விஸ்ட் தான், பேச்சியை விட பயங்கரமாக இருக்கிறது.
ஹீரோ தேவ் ராம்நாத், கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்திருக்கிறார். உடன் நண்பர்களாக வரும் ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, மகேஷ் ஆகியோரும் தங்கள் இருப்பை நியாயப்படுத்தியிருக்கிறார்கள். பேச்சியாக வரும் பாட்டி, நமக்கு நன்கு அறிமுகமானவர். இவர் பேயா என்று யோசிப்பதற்குள், படுபயங்கர பெர்ஃபாமன்ஸ் செய்து மிரட்டிவிடுகிறார்.
பொதுவா இருட்டு பங்களாவில் பேய் பயம் காட்டுவது எளிது. இந்த படத்தில் பகலில் அதுவும் அடர்ந்த காட்டுக்குள் பேய் பயம் காட்டுகிறார்கள். அதற்கு பார்த்திபனின் ஒளிப்பதிவும், ராஜேஷ் முருகனின் பின்னணி இசையும் உதவுகிறது. சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, காட்டில் ஒரு காட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் ராமச்சந்திரன். மொத்தத்தில் இந்த படம் நல்லதொரு தியேட்டர் திகில் அனுபவத்தை தருகிறது.