சிறிய இடைவெளிக்கு பிறகு நகுல் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். இடைவெளி விழுந்தாலும் அதே துள்ளல், அதே சுறுசுறுப்புடன் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இது ஒரு சிக்கலான கதை. அதாவது கலியுகத்தில் எல்லோருமே கெட்டவர்களாகிவிடுவார்கள் என்பதாக நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட கலியுகம் இப்போதே வந்து மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்களாக மாறி நல்லவர்களை விரோதிகளாக பார்த்தால் எப்படி இருக்கும் என்பதாக மாற்றியோசித்து கற்பனை செய்து காமெடி படம் தந்திருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.
நகுல் மிகவும் நல்லவர். ஆனால் கெட்ட சமுதாயம் அவரை வெறுக்கிறது. நாயகியின் தந்தை ஆனந்தராஜ் தன் மகள் அர்த்தனா பினுவை ஒரு கெட்டவனுக்குத்தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். இதனால் நல்லவனான நகுல் கெட்டவனாக நடித்து அர்த்தனாவை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்.
நகுலின் அங்கிள் முனீஷ்காந்த் நகுலை எப்படியாவது கெட்டவனாக்கி இந்த சமூகத்தில் நன்றாக வாழ வைக்க முயற்சிக்கிறார். இதற்கிடையில் நல்லவர்களை அடைத்து வைக்கும் ‘வாஸ்கோடகாமா’ என்ற சிறையில் அடைபட்டுக்கிடக்கும் தனது தந்தை கே.எஸ்.ரவிகுமார் மூலம் ஒரு காரியத்தை முடிக்க நகுலும் சிறைக்கு செல்கிறார். அவர் சிறை சென்ற காரியம் முடிந்ததா? அர்த்தனாவை திருமணம் செய்தாரா என்பதுதான் கதை.
வழக்கமான ஒரு கதையை தோசையை திருப்பி போடுவது போல திருப்பி போட்டால் எப்படி இருக்கும் என்பது படம். இதனை முழுக்க முழுக்க காமெடி கலந்து சொல்கிறார்கள். அருண் என்.வி.யின் இசையும், என்.எஸ்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். கே.எஸ்.ரவிகுமார் முதன் முதலாக இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். சிரிக்கவும் வைக்கிறார், சீரியசாகவும் நடித்திருக்கிறார். அர்த்தனா பினுவுக்கு இடைவேளைக்கு பிறகு வேலை இல்லை என்றாலும் முற்பகுதி கதையில் அழகு காட்டிச் செல்கிறார்.
திரைக்கதையை குழப்பம் இல்லாமல் பார்வையாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இன்னும் நேர்த்தியாக அமைத்திருந்தால் குறிப்பிடத்தக்க படமாக அமைந்திருக்கும். என்றாலும் வழக்கமான திரைக்கதையில் இருந்து மாறுபட்டு படம் தந்த வகையில் ‘வாஸ்கோடகாமா’ கவனிக்க வைக்கிறது.