V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’.. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார்.
குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் படமாக ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது.இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் காலா, கபாலி புகழ் லிங்கேஸ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
பிரபல மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். வரும் ஆகஸ்ட் 9ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.ரி
இதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது :இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநரும் அந்த கதையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். இங்கே வெற்றி தோல்வி என்பது சகஜம்.. நாம் நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்று தான் பார்க்க வேண்டும். அதன் பிறகு அது ரசிகர்கள் கையில். இங்கே நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் முதல் படத்திலேயே நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த அனுபவங்கள் தான் அவர்கள் முதலீடு. அதனால் விட்டதை விட்ட இடத்தில் தான் பிடிக்க வேண்டும். எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும்..