ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘டெட்பூல் & வோல்வரின்’ தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் கதை இதுதான். தன் வாழ்வின் முக்கிய நோக்கத்தை அடையும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் வேட் டெட்பூல் (ரையான் ரேனால்ட்ஸ்). அவெஞ்சர்ஸ் குழுவில் சேர்வதற்கு கூட முயற்சி செய்கிறார். ஆனால் அவரது யுனிவர்ஸில் முக்கிய நண்பர் வோல்வரின் இறந்து போய்விட்டதால் அவரது யுனிவர்ஸும் மெல்ல அழிகிறது. இதனால் டெட்பூலை தங்களுடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறது காலத்தை கட்டுப்படுத்தும் டைம் வேரியன்ஸ் அதாரிட்டி (டிவிஏ) அமைப்பு.
ஆனால், அதில் விருப்பமில்லாத டெட்பூல், தனது யுனிவர்ஸை காக்க மற்றொரு யுனிவர்ஸில் வாழும் மற்றோரு வோல்வரினை (ஹ்யூ ஜாக்மேன்) தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார். இதனால் டிவிஏ அமைப்பில் இருக்கும் பாரடாக்ஸ் என்ற நபரின் மூலம் ‘வாய்ட்’ எனப்படும் உலகுக்குள் இருவரும் போய் விழுகின்றனர். அங்கு ஆட்சி செய்யும் வில்லி கஸாண்ட்ராவை (எம்மா கோரின்) இருவரும் எதிர்கொண்டு அங்கிருந்து எப்படி தப்பினார்கள்? டெட்பூல் தன்னுடைய உலகை காப்பாற்றினாரா என்பதை செம காமெடியாக சொல்வதுதான் படத்தின் கதை.
படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் போடப்பட்டதிலிருந்து படம் முடியும் வரையும் எதிர்பாராத வகையில் பல ஆச்சர்யங்கள் அணிவகுக்கின்றன. படம் முழுக்க டெட்பூல் பேசும் வசனங்கள் டபுள் மீனிங் வகையறா.‘வோல்வரின்’ வலுவாக உருவா’கப்பட்டுள்ளது. குறிப்பாக, க்ளைமாக்ஸில் வரும் ஒரு சண்டை காட்சி மாஸ். மொத்தத்தில் ஆக்ஷன் பிரியர்களுக்கு சரியான அல்வா விருந்து. இப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது.
================