பூவரம் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஹலீதா ஷமீம் தற்போது ‘மின்மினி’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசை அமைத்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் வளர்ந்து ஆளான பிறகு அவர்களை மீண்டும் அதே கேரக்டர்களில் நடிக்க வைத்து உருவாகி இருக்கும் படம் இது.
இந்த படத்தின் பணிகள் முடிந்து விரைவில் வெளிவர இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இசை அமைப்பாளர் கதீஜா ரகுமான் பேசியதாவது: இது நடக்கிறது என்று நம்ப முடியவில்லை. இந்தப் படத்திற்காக கடந்த 2022ல் ஹலிதா மேம் என்னை அணுகினார். அவருக்கும் என் இசை பிடித்திருந்தது. ஹலிதா மேம் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது எனக்கு வேலை செய்ய இன்னும் எளிதாக இருந்தது. என்னை நம்பி வேலை கொடுத்த ஹலிதா மேமுக்கும் எனக்கு வேலையில் பக்கபலமாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்றார்.
இயக்குநர் ஹலிதா ஷமீம் பேசும்போது “’மின்மினி’ படம் ஷங்கர் சார் வரை ரீச் ஆகி இருக்கிறது. குழந்தைகளை சின்ன வயதில் வைத்து படம் எடுத்து பின்னர் அதற்காக காத்திருந்தார்களே அந்தப் படமா என பலரும் கேட்கிறார்கள். இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை. ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களுக்காகக் காத்திருந்தேன்.இந்தப் படத்தை நம்பி இத்தனை வருடங்கள் கழித்தும் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், படத்தை வெளியிடுபவர்கள் எல்லோருக்கும் நன்றி” என்றார்.