1999ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘சுயம்வரம்’. அந்த காலத்தில் முன்னணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட நடிகர் மற்றும் நடிகைகளை கொண்டு உருவான இந்த படத்தை 6 யூனிட்களாக பிரிந்து இயக்கினார்கள். இந்த சாத¬னை முறியடிக்கும் வகையில் 23 மணி நேரம் 23 நிமிடத்தில் இரண்டு யூனிட்களாக பிரிந்து ‘பிதா’ என்ற படத்தை புதியவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். அதுவும் ஒரு பக்கா கிராம் த்ரில்லர் கதையை.
படத்தின் கதை இதுதான்: தொழிலதிபர் அருள்மணியை கடத்தி வைத்துக்கொண்டு அவரது மனைவியிடம் 25 கோடி பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள் வில்லன்கள் ஆதேஷ் பாலா கோஷ்டி. அதோடு நாயகி அனு கிருஷ்ணாவையும் காது கேளாத, வாய் பேச முடியாத அவரது 10 வயது சிறுவனான அவரது தம்பியையும் கடத்துகிறார்கள். ஆபத்தில் சிக்கியிருக்கும் தனது அக்காவை காப்பாற்ற முயற்சிக்கிறார் தம்பி. சிறுவனின் முயற்சி வெற்றி பெற்றதா? ஆதேஷ்பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் முயற்சி வெற்றி பெற்றதா? உண்மையில் கடத்தலின் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் நாயகன் நாயகி என்று யாரையும் பிரித்து கூற இயலாது. எல்லோருமே அவரவர் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லன் ஆதேஷ் பாலா, சஸ்பென்ஸ் கேரக்டரான ரெஹான, அனு கிருஷ்ணா, காதுகேளாத சிறுவனாக வரும் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரீஸ் ராஜா, அருள்மணி, சிவன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். இளையராஜாவின் ஒளிப்பதிவு, நரேஷின் இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சுகன் கடைசி 30 நிமிடத்தில் அடுத்தடுத்த திருப்பம் தந்து படத்தை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.
இப்படி ஒரு கதையை 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்திருப்பது வியப்பாக இருக்கிறது. குறிப்பாக பிரமாண்டமான கோவில் திருவிழாவில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கிய விதம், கடத்தல் காட்சிகளும் அதை தொடர்ந்து இடம்பெறும் திருப்பங்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
படத்தில் நிறைய குறைகளும், கேள்விகளும் உண்டு. ஆனால் ஒரு சாதனை படத்தில் அதை பெரிது படுத்த தேவையில்லை. சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்.