கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘ரகு தாத்தா’ . ‘தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய ‘ இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேசுடன், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசியதாவது: ரகுதாத்தா கதைக்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் ‘ரகு தாத்தா’வில் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதே சமயம் எனக்குள் இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்களை திரையரங்கத்திற்குள் இழுத்து வர முடியும்? என்ற தயக்கம் இருந்தது. அதனை இயக்குநரும், விஜயும் நம்பிக்கை அளித்து தயக்கத்தை உடைத்தனர். அவர்கள் கொடுத்த துணிச்சலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன் எனும்போது இன்னும் பெருமிதம் கூடுகிறது. இதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த எம். எஸ். பாஸ்கர்- படபிடிப்பு தளத்தில் என்னை ‘பொம்மை பொம்மை..’ என்று தான் அழைப்பார். படத்தில் வசனம் பேசும்போது அவருடைய டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும். படத்தில் தாத்தா- பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. அதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாதது. மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரகு தாத்தா – ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது. எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஆனால் அது பிரச்சாரமாக இருக்காது. இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும்.
பொதுவாகவே திணிப்பை பற்றி பேசியிருக்கிறோம். அதில் கதையை தொடர்பு படுத்தும் வகையில் இந்தியை ஒரு உதாரணமாக சொல்லி இருக்கிறோம்.இந்த படம் எந்த ஒரு அரசியலையோ எதிர்மறையான விசயங்களையோ சொல்லவில்லை. இது ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தருபவர்கள் படத்தை பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பலாம். என்றார்.
==========