புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’. இதனை டி.டி.சினிமா ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.ராஜா மற்றும் டெய்லி குருஜி இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.ராஜா இயக்கி உள்ளார். கதை நாயகர்களாக ஸ்ரீஹரி, அப்புகுட்டி, விக்ரம் சுந்தர், நாயகியாக ரிதி உமையாள் நடித்துள்ளனர். இவர்கள் தவிர சந்தான பாரதி, செந்தில்நாதன், ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, சேஷு உள்பட பலர் நடித்துள்ளனர். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.எஸ்.ரவிபிரியன் இசை அமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இசையை இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டார். விழாவில் மன்சூரிகான், பேரரசு, அப்புக்குட்டி, ஆர்.சுந்தர்ராஜன், ராசி அழகப்பன், சச்சின் மாலி, எழில், சரவண சுப்பையா, சவுந்தர பாண்டியன், உள்ளபட பலர் கலந்து கொண்டனர்.
படம் பற்றி இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறும்போது “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியாரின் பாடலே கதையின் மைய கரு. சூரியன் மேல் கொண்ட சூரியகாந்தி பூவின் காதலை போல ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். அந்த காதலுக்குள் ஜாதி என்கிற பேய் நுழைந்து என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை. காதலுக்குள் ஜாதி என்கிற ஜார்னரில் இதற்கு முன் பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். என்றார்.