பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கி உள்ளனர்.
யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என நினைத்து அசைவம் கூட சாப்பிடாமல் ஐடி கம்பெனியில் வேலை செய்து வாழ்ந்து வருகிறவர் விஜய் கனிஷ்கா. வாழ்க்கை சந்தோஷமாக போகும்போது குடும்பத்தில் ஒரு பிரச்சினை. அம்மாவையும் சகோதரியையும் முகமூடி கொலைகாரன் ஒருவன் கடத்திக் கொண்டு சென்று விஜய் கனிஷ்காவுக்கு சில கொலைகளை செய்ய வைக்கிறான்.
அந்த முகமூடி மனிதன் யார், அவன் கொலை செய்ய சொல்வது யாரை, எதற்காக விஜய் கனிஷ்காவை அவன் தேர்வு செய்தான் என்பதுதான் மீதி கதை.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நிறைந்து வரும் சூழலில் விஜய் கனிஷ்காவும் அப்படி அறிமுமாகி உள்ளார். முதல் படத்தில் நடிப்பது போன்று தெரியாத அளவுக்கு நேர்த்தியாக நடித்திருக்கிறார். சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இருவருமே சண்டை காட்சியில் கடுமையாக உழைத்திருவகிறார்கள். குறிப்பாக விஜய் கனிஷ்கா வில்லனிடம் செமத்தியாக அடி வாங்கும் காட்சிகள் நிஜம்போலவே படமாக்கபட்டுள்ளது.
சமுத்திரகனி, கெளதம் மேனன், அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். நீட் பிரச்சனை, கொரோனா கால முறைகேடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சமூக அக்கறையும் இருக்கிறது. படத்தில் பெரிதாக ரொமான்ஸ் மற்றும் பாடல்கள் இல்லாதது ஆறுதல். ஆங்கில, கொரியன் படம் அதிகம் பார்ப்பவர்களுக்கு மாஸ்க் மேன் யார் என்பது தெரிந்து விடும். மற்றவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.