மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து சங்கர நாராயணனும் (ராமராஜன்) அவரது நண்பர் மூக்கையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), சென்னையில் உள்ள அவர்களது நண்பர் பஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு விருந்தினர்களாக வருகிறார்கள். மறுநாள், தியாகராயர் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்குப் போகும் சங்கர நாராயணன், வெடிகுண்டையும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி, வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதியாக்குகிறார். வங்கியின் மேலாளர் போஸ் வெங்கட் வீட்டை மூக்கையாவும், துணை மேலாளர் வீட்டை ஃபாஸில் பாயும் துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். இந்த மூன்று முதியவர்களும் இப்படிச் செய்ய என்ன காரணம் என்பதுதான் படம்.
வழக்கமான கலர் சட்டை, காதல், காமெடி எதுவும் இல்லாமல் புதிதாக ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார் ராமராஜன். படம் முழுக்க எம்.ஜி.ஆர் பாணியில் கருத்து சொல்லிக் கொண்டிருந்தாலும் காரியத்திலும் கண்ணாக இருக்கிறார். ஆக்ஷன் நடிப்பில் மிகவும் சிரமப்படுகிறார். சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் பண்ணுகிறார். தன் முதிர்ச்சியான நடிப்பால் மூக்கையா கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
நக்ஷா சரணும், லியோ சிவக்குமாரும் பிளாஷ் பேக் காட்சிகளை நிறைவாக செய்திருக்கிறார்கள். வில்லனாக ‘மைம்’ கோபி. போஸ் வெங்கட், கே.எஸ்.ரவிக்குமார், தீபா சங்கர், ஸ்மிருதி வெங்கட், முல்லை, அபர்ணதி எல்லோரும் இயக்குனர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். சி.அருள் செல்வனின் ஒளிப்பதிவு பளிச் ரகம். இளையராஜாவின் இசையில் ‘கண்ணான கண்ணே’ பாடல் மட்டும் கனத்தைத் தருகிறது.
எளிதில் யூகிக்கக்கூடிய, ஒரு கதையைத் தந்திருக்கிறார் கதாசிரியர் வி.கார்த்திக் குமார். என்றாலும், முடிந்தளவிற்கு விறுவிறுப்பையும் எமோஷனையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் ராகேஷ்.