திருமணமாகும் வரை அடக்கமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர் கணித்து சொல்லிவிட்டதால், அம்மாவின் பேச்சைக் கேட்டு எந்த வம்புக்கும் செல்லாதவர் ஆதி. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். அந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் வானதியை (காஷ்மீரா) காதலிக்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்துக்கான பணிகள் தொடங்கிய நிலையில் எதிர்வீட்டு இளவரசு மகள் அனைகா சுரேந்திரனுக்கு அவர் படிக்கும் கல்லூரியில் ஒரு பாலியல் பிரச்சினை, அப்புறமென்ன ஜோதிடர் சொன்னது, அம்மா சொன்னது எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு கிளம்புகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், பெற்றோராலும், சமூகத்தாலும் தனித்து விடப்படுகிறாள் என்பதை தெளிவாக காட்டுகிறது படம். ஆனால், பாலியல் துன்புறுத்தலை அழுத்தமாக பேசுவதை விட, அதை மையமாக வைத்து நாயகனை ஹீரோவாக்க முயல்கிறது படம்.
ஆதி வழக்கமான தன்னுடைய நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கஷ்மீரா நடிப்பு பரவாயில்லை ரகம். உணர்வுபூர்வமான காட்சிகளில் தடுமாறுகிறார். ஆரம்பத்தில் பில்டப் கொடுக்கப்பட்ட தியாகராஜனின் வில்லன் கதாபாத்திரம் போக போக புஸ்வானாமாகி விடுகிறது.
இளவரசு, தேவதர்ஷினி, ராஜா, வினோதினி, அனிகா சுரேந்தர் யதார்த்தமான நடிப்பு கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுகிறது.
பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன் சீனியர் நடிகர்கள் என்பதை உணர்த்துகின்றனர். முனிஷ்காந்த், பிரச்சனா பாலசந்திரன், அபிநக்ஷத்ரா, மதுவந்தி, பிரனிக்ஷா ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசையும், மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களை பேசிய வகையிலும், அதிலும் பெண்களின் ஆடை, அவர்கள் மீதான அத்துமீறல்களுக்கு காரணமில்லை என்று சொன்னவிதத்திலும் கவனிக்க வைக்கிறது படம்.