கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன்: ‘வெள்ளிவிழா நாயகன்’ மோகன்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஹரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது. ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விழாவில் தனது ரசிகர் மன்றம் சார்பில் மோகன் பல ஏழை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் பல ஏழைப் பெண்களுக்குத் தையல் மெஷின் முதலான உதவிப் பொருட்களை வழங்கினார்.

விழாவில் மோகன் பேசியதாவது:
எத்தனை தடவை ரசிகர்களுக்கு நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. உங்களுக்கு நான் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறேன். நான் நடித்தாலும், இல்லையென்றாலும் என் மீது அன்பு செலுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. ஏன் நடிக்கவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், எனக்குக் கதை பிடித்தால் மட்டுமே நான் நடிப்பேன். விஜய் ஶ்ரீ ஜி 7 முறை கதையைத் திருத்திய பிறகு தான் இந்தப்படம் ஒத்துக்கொண்டேன்.

இந்தப்படத்திற்குக் கோவை மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு வியப்புக்குரியது, அத்தனை மக்களுக்கும் எங்கள் நன்றி. இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் பிரமாதமாகச் செய்துள்ளார்கள். இன்றைய 2கே கிட்ஸ் முதல் அனைவருக்கும் பிடிக்கும் படி , விஜய் ஶ்ரீ ஜி படத்தை உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின். அருமையான பாடல்களை அவர் தந்துள்ளார். மகளைப் பற்றிய பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நேர்மையாக உண்மையாக ஒரு படத்தை உருவாக்கினால், எந்த காலத்திலும் வியாபாரம் இருக்கும் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. டீசர் பார்த்துப் படத்தை வாங்க கோவை பிரதர்ஸ் முன் வந்துள்ளார்கள், மிகவும் பெருமையாக உள்ளது. உங்கள் ஆசீர்வாதத்தில் இந்தப்படம் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரும். கோவை பிரதர்ஸ் இப்படத்தை விநியோகிக்கிறார்கள். இந்தப்படம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இருக்கும்,

இவ்வாறு மோகன் பேசினார்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.