ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் எலெக்ஷன். மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் கஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடுகிறார்.
படத்தின் அறிமுக விழாவில் படம் பற்றி நாயகன் விஜய்குமார் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி… உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாகத்தான் இந்த படம் தயாராகி இருக்கிறது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு… இந்த கதையின் முதுகெலும்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டரை தான் சொல்ல வேண்டும்.
கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்பா… பெரியப்பா… சித்தப்பா.. மாமா.. என யாரேனும் ஒருவரை பார்த்திருப்போம்.’அமாவாசை’ போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது.
இப்படி இருப்பவர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது.. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது. தயாரிப்பாளர் ஆதித்யாவுடன் இது இரண்டாவது படம். அவருடனும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி . தொடர்ந்து தரமான படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்.
இவ்வாறு அவர் பேசினார்.