தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன.
இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது.
இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளதுதான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி தன்னுள் இன்னும் சில ஓடிடி தளங்களை ஒன்றிணைத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். இதன் துவக்க விழா நடந்தது. இயக்குனர் சீனு ராமசாமி துவக்கி வைத்தார்.