குரங்கு பெடல் விமர்சனம்: தமிழ் சினிமாவின் முக்கியமான படம்

1980களில் நடப்பது மாதிரியான கதை. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கத்தேரி என்ற ஊரில் ஐந்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் ஒரு சிறுவன் மட்டும் சைக்கிள் வாங்கிவிட மூன்று சிறுவர்கள் சைக்கிள் வாங்கிய சிறுவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள். மாரியப்பன் என்ற சிறுவன் மட்டும் தனித்து விடப் படுகிறான்.

சின்ன வயது கசப்பான அனுபவத்தால் சைக்கிள் மீதே வெறுப்பு காட்டும் தந்தையை மீறி மாரியப்பன் வாடகை சைக்கிள் எடுத்து குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்கிறான். இந்தச் சைக்கிள் கற்றுகொள்ளும்போது நடக்கும் நிகழ்வுகளை, குழந்தைகளின் அழகான உலகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக கண் முன் காட்டி உள்ளார் டைரக்டர் கமலக்கண்ணன்.
டிவி, சமூக ஊடகங்கள், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் என மூழ்கிக் கிடக்கும் இந்த இளம் தலைமுறையினருக்குத் தெரியாத 1980களில் வாழ்ந்த குழந்தைகளின் வாழ்வியல் யதார்த்ததைச் சொல்லி இருக்கிறார். கொங்கு தமிழ், கோடையிலும் வற்றாத பவானி நதி, பரிசல், தோல் பாவை கூத்து என காட்சிக்குக் காட்சி செதுக்கி இருக்கிறார் . ஒரு சிறு கதாபாத்திரம் கூட நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அந்த அளவிற்கு கேக்டர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

காளி வெங்கட்டின் நடிப்பு மெருக்கேறிக்கொண்டே வருகிறது. கொங்கு மண்ணின் குசும்பும், ஒரு பாசக்கார தந்தையாகவும் சிறப்பாக நடித்துள்ளார். மாரியப்பனாக நடித்துள்ள மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் நடிக்கவில்லை. மாரியப்பனாகவே வாழ்ந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சுமி.பாஸ்கரனும், சைக்கிளுக்கு இரு சக்கரம் போன்று பயன்பட்டிருக்கிறார்கள். பிரசன்னா பாலசந்தர், ஜென்சன் திவாகர், செல்வா, சாவித்ரி என ‘நக்கலைட்ஸ்’ டீம் படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது.

கத்தி, ரத்தம், துப்பாக்கி சத்தம் என கலகத்து கிடக்கும் சினிமாக்களுக்கு மத்தியில் தெளிந்த அழகான நீரோடையாய் பயணிக்கிறது படம். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களின் பட்டியலில் இணைகிறது குரங்கு பெடல்.

Leave A Reply

Your email address will not be published.