இரண்டு பெண்களுக்குத் தந்தை எம்.எஸ்.பாஸ்கர். நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படிக்கப்போன இளைய மகள் காணாமல் போய் சில நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்படுகிறாள். அடுத்த மகளும், அவளை மணக்க இருப்பவனும் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். இத்தனைக்கும் காரணமானவர்களை தேடி கண்டுபிடித்து எம்.எஸ்.பாஸ்கர் பழிவாங்குவதுதான் கதை. ஆனால் இந்த கதையின் கடைசி நேர டுவிட்ஸ்ட் மொத்த கதையையும் புரட்டிப்போடும்.
வழக்கமாக அழுதுவடியும் குணசித்ர வேடத்தில் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் குற்றவாளிகளைத் தாக்கி உண்மையை வரவைக்கும்போது மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு மாறுபட்ட அவதாரமெடுத்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மூத்த மகளாக வெண்பா, அவருக்கு ஜோடியாக விஷ்வந்த், இளைய மகளாக பிரியதர்ஷினி, வில்லன்களாக ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் என பிரதான பாத்திரங்களில் வருகிறவர்கள் கதைக்கேற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள், பார்த்துப் பழகிய அரசியல்வாதி பாத்திரத்தில் வந்து போகிறார் நமோ நாராயணன்.
எஸ்.ஆர்.ஹரியின் பின்னணி இசையும் எம்.ஏ.ஆனந்தின் ஒளிப்பதிவும் படத்துக்கு தேவையான பங்களிப்பை செய்திருக்கிறது. அரசியல்வாதிகளின் அதிகார போட்டிக்கு பலியாவது அப்பாவி மக்கள்தான் என்பதுதான் படம் சொல்லும் மெசேஜ். இயக்குனர் அருண் கே.பிரசாந்த் வன்முறை காட்சிகளில் ரத்தம் பீரிட்டு அடிப்பதை குறைத்து திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நல்லதொரு கிரைம் த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.