மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) 8 லட்ச ரூபாய் கடன் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு ரியல் எஸ்டேட் தாதா வேல ராமமூர்த்தியிடம் இருக்கும் தனது இடத்து பத்திரத்தை வாங்கி வரச் செல்கிறார். சென்றவர் திடீரென காணாமல் போகிறார். இதுகுறித்து சேகரனின் மனைவி சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி) புகார் கொடுக்கிறார். இதனை விசாரிக்கிறார் காவல்துறை ஆய்வாளர் பரிதி இளமாறன் (தமன் குமார்).
இந்த புகாரை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே நகைக்கடையில் பணியாற்றும் பார்வதி (நிகிதா) என்னும் இளம்பெண், மர்மமான முறையில் தன் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் கொல்லப்படுகிறார். பார்வதியைக் கொன்றது யார், சேகரன் என்ன ஆனார்? சேகரன் காணாமல் போனதற்கும் பார்வதி கொலைக்கும் என்ன தொடர்பு? இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் படத்தின் கதை.
கதை எவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறதோ, அந்த விறுவிறுப்பு சிறிதும் குறையாமல் படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.மணிவர்மன்.. சந்தேக வலையில் விழும் ஒவ்வொருவரையும் தேடிக் கண்டுபிடிப்பதும் அவர்களிடம் விசாரணை நடத்துவதும் ஒவ்வொருவரிடமிருந்தும் வழக்கு வேறு திசைக்கு நகர்வதுமாகப் பயணிக்கும் திரைக்கதை வியக்க வைக்கிறது. இறுதியில் குற்றவாளி யார் என்பதும் குற்றத்துக்கான காரணம் என்ன என்பதும் தெரியவரும்போது ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. காரணம் யாராலும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் அது.
காவல்துறை அதிகாரியாக தமன் குமார், கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி, வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபா சங்கர், கஜராஜ் அனைவருமே கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கதைக்குத் தேவையானதைத் தந்துள்ளன.
மலையாள படங்களின் பாணியில் எளிமையான ஒரு இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லாக கவனம் பெறுகிறது.