தாயில்லாமல் வளரும் பிள்ளை, ரத்னம் (விஷால்) தன்னை ஆதரிக்கும் பன்னீர் செல்வத்தை (சமுத்திரகனி) பாதுகாக்க கொலை ஒன்றை செய்துவிட்டு சிறார் சிறைக்கு செல்கிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, எம்எல்ஏவாக மாறியிருக்கிறார் பன்னீர்செல்வம். அவருக்கு தளபதி போன்று இருந்து ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ என்ற ரீதியில் அடிதடி, பிரச்சினைகளில் ஈடுபடுகிறார் ரத்னம்.
ஒருநாள் எதிர்பாராத விதமாக மல்லிகா (ப்ரியா பவானி சங்கர்) சந்திக்கும் ரத்னம் அவர் மீது அளவு கடந்த பேரன்பு காட்டுகிறார். அவருக்காக உயிரை கொடுக்கவும், உயிரை எடுக்கவும் தயாராகிறார். இதன்தனைக்கும் மல்லிகா மீது அவருக்கு காதல் இல்லை. அப்படியென்றால் மல்லிகா யார், ரத்னம் யார் என்பதுதான் படத்தின் கதை.
தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி – விஷால் இணையும் 3வது படம். வழக்கமாக தென் தமிழ்நாட்டில் படம் எடுக்கும் ஹரி முதன் முறையாக தமிழக – ஆந்திர எல்லையில் கதைக்களத்தை அமைத்து, ரியல் எஸ்டேட் தாதாயிசம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத சூழல், தாய்ப் பாசம், என காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளார்.
விஷால் வழக்கமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். சண்டை காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் இதுவரை நடித்த படங்களிலேயே கனமான கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார். இதுவரை யாரும் நடிக்காத ஒரு கேரக்டர் என்றும் சொல்லலாம். யோகிபாபு வரும் காட்சிகள் அனைத்திலும் தியேட்டரில் சிரிப்பலை.
வில்லன் முரளிசர்மா அவரது சகோதர்கள் ஹரிஷ் பெரடி, முத்துகுமார். ஜெயபிரகாஷ், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்டோர் தேவையுணர்ந்து நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி சண்டைக் காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்டுகிறது. ‘உயிரே என் உயிரே’ பாடல் காதுக்குள் ஒலிக்கிறது. கனல் கண்ணனின் சிங்கிள் ஷாட் சண்டை காட்சி இன்னும் சில காலத்திற்கு பேசப்படும்.
வன்முறை காட்சிகளை குறைத்திருந்தால் படத்தை இன்னும் ரசித்திருக்கலாம்.