பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘ரெட்ட தல’. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சித்தி இட்னானி, தான்யா ரவிச்சந்திரன் அவர் ஜோடியாக நடிக்கிறார்கள். ஹரீஷ் பெரேடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய்,பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட்அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் அருண் விஜய் பேசியதாவது:
இந்தத்ப்படத்தோட கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. நான் எப்பவும் ஒரு பார்வையாளனாக உட்கார்ந்துதான் கதை கேட்பேன். அந்த நேரத்துல ஒரு பார்வையாளனாக என்னை அந்தக் கதை ஆச்சரியப்படுத்துச்சுனா அந்தப் படத்தைப் பண்ணுவேன். இந்தப் படத்துல ஒரு கூடுதல் ஸ்பெஷல் இருக்கு. ‘தடம்’ படத்துக்குப் பிறகு இதுல இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்கான தலைப்பைப் பற்றிப் பேசும்போது ‘ரெட்ட தல’ங்கிற டைட்டில் சொன்னாங்க. இயக்குநர் அந்த ரெண்டு கதாபாத்திரங்களையும் வித்தியாசமான முறையில எழுதியிருந்தார். படத்துல வர்ற ரெட்ட தலையும் நான்தான்.
‘தல’ங்கிறது தமிழ்நாட்டுல ரொம்பவே பவர்ஃபுல்லான டைட்டில். இந்தத் திரைப்படத்தோட கதாபாத்திரத்துக்கு அப்படி ஒரு வலிமையான தலைப்பு தேவைப்பட்டுச்சு. இந்தத் திரைப்படத்தோட தலைப்பை 10 வருஷமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வச்சிருந்தார்ன்னு சொன்னாங்க. எங்களுக்காக இந்தத் தலைப்பைக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிச்சுகிறேன்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு அஜித் சாருடைய ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. அவங்க மட்டுமில்ல பலரோட ரசிகர்களும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க.அவங்க இல்லைன்னா நான் இன்னைக்கு இங்க இல்ல. நான் இங்க மக்களை மகிழ்விக்கிறதுக்காக இருக்கேன். ஒவ்வொரு படத்துலயும் புதுசா பல விஷயங்களைப் பண்ணனும்னு ஆசைப்படுறேன். இவ்வாறு அருண் விஜய் பேசினார்.
=========