கிரிமினாலஜி படிக்கும் மாணவர்கள் இணைந்து ‘ஃபைண்டர்’ என்ற அமைப்பை தொடங்குகிறார்கள். குற்றம் செய்யாமல் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களின் வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து மறு விசாரணை செய்து அவர்களை விடுதலை செய்ய வைப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.முதல் வழக்காக சார்லியின் பிரச்சினை வருகிறது.
அன்பான மனைவி, மகள் என அளவான மீனவ குடும்பம் சார்லியுடையது. இவர்கள் ஈடுபட்ட ஒரு சீட்டுகம்பெனி காரன் ஏமாற்றி ஓடிவிட மொத்த ஊர் பணத்துக்கும் இவர்களே பொறுப்பாகிறார்கள். தன்னுடைய படகு, மனைவி நகை எல்லாவற்றையும் விற்று கொஞ்ச கடனை அடைக்கிறார். மீதி கடனுக்காக தனது மைத்துணர் செண்ட்ராயன் ஆலோசனைப்படி செய்யாத ஒரு குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைக்கு போகிறார். 6 மாதத்தில் வெளியில் வந்து விடலாம். 5 லட்சம் பணம் கிடைக்கும் என்று நம்பி சிறைக்கு போகிறார். அது ஒரு கவுன்சிலர் கொலை வழக்கு. இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைபடுகிறார்.
இந்த வழக்கை கையில் எடுக்கும் ஃபைண்டர் அமைப்பினர் உண்மையான குற்வாளிகளை கண்டுபிடித்தார்களா? சார்லி விடுதலை பெற்றாரா? என்பதுதான் படத்தின் கதை. சார்லி தனது அனுபவ நடிப்பால் படத்தை தாங்கி பிடிக்கிறார். குறிப்பாக வயதான தோற்றத்தில் சிறையில் அவர் கதறும் காட்சிகள் நெகிழ வைக்கிறது. அப்பாவுக்காக போராடும் மகளும் கவனிக்க வைக்கிறார். சார்லி, செண்ட்ராயன் தவிர அனைவருமே புதுமுகங்கள்தான். தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் வினோத் ராஜேந்திரன் பைண்டர் அமைப்பின் தலைவராகவும் நடித்துள்ளார். நிழல்கள் ரவி சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். பிரசாந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவு கச்சிதம், சூர்ய பிரசாத்தின் பின்னணி ஓகே ரகம். சில இடங்களில் வசனத்தைகூட கேட்கவிடாமல் செய்திருக்கிறார்.
செண்ட்ராயன் கேரக்டர் பற்றி முன்பே யூகிக்க முடிவது திரைக் கதை பலவீனம். மற்றபடி கிளைமாக்சை கணிக்க முடியாத ஒரு நேர்த்தியான கிரைம் திரில்லர் படமாக அமைந்திருக்கிறது. அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாகத்திற்கான தகுதி படத்திற்கு இருக்கிறது.