தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், உலகம் முழுவதும் ஏப்ரல் 26ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் படம் ஒரு நொடி. தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை பி. மணிவர்மன் இயக்கி உள்ளார். எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இம்மாத இறுதியில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் நாயகன் தமன்குமார் பேசியதாவது: ஒருவருக்கு ஒருவர் எப்போது உதவி செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் நிறைய பேர் நம்மை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது உதவி செய்யும் போது தெரியாது. கொஞ்சம் நாட்கள் கழித்து அல்லது கொஞ்சம் மாதங்கள் கழித்து.. நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நொடியில் நமக்கு புரிய வரும். சினிமாவில் இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். சில பேருடைய வாழ்க்கையிலும் இது ஏற்பட்டிருக்கும். சில பேருக்கு இது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு உடனிருக்கும் நண்பர்களால் ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களை நான் மறந்து விட்டேன். ஆனால் உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கவில்லை.
என் வாழ்க்கையில் முக்கியமாக ஒருவர் உதவி செய்தார் என்றால்… அது ஈரோடு மகேஷ் தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் இல்லை என்றால்… கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் நான் இருந்திருக்க மாட்டேன். தற்போது ஒரு நொடி படத்தில் நடித்ததால் அனைத்தையும் கடந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவை சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் வெளிவராமல் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் ஊடகவியலாளர்களான நீங்கள் என் மீது அக்கறை கொண்டு ஊக்கப்படுத்தினீர்கள். இதற்காக இந்த தருணத்தில் நான் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் தயாரிப்பாளர் தான். நல்ல நடிகர்கள் எப்போதும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பார்கள். இதனை ஒரு தயாரிப்பாளரால் தான் முதலீடு செய்து தகுதியான கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்க முடியும். இந்த திரைப்படத்தை நம்பி முதலீடு செய்து என்னை போன்ற திறமையான நடிகர்களை… மணி வர்மன் போன்ற திறமையான இயக்கநரையும் ..தயாரிப்பாளர் அழகரால் தான் உருவாக்க முடியும். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பின் போது ஏராளமான நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்பட்டன. இருந்தாலும் தயாரிப்பாளர் அதனை எளிதாக கையாண்டு படத்தை உருவாக்கினார். முதலில் அவர் திரைப்படம் தயாரிப்பதை.. அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. இப்போதுதான் அவர்களுக்கு தெரியும். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவருடைய ஊரில் தான் படப்பிடிப்பை நடத்தினார்.
இந்தப் படத்திற்கு தூணாக விளங்கிய மற்றொருவர் கே ஜி ரத்தீஷ். ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல இணை தயாரிப்பாளர் கூட. அவருடைய பங்களிப்பு என்பது ஈடு இணையற்றது. படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். அவர் ஒரு நாளைக்கு திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் தெளிவாக படமாக்குவார். ஒரு நாளைக்கு 65 ஷாட்களை படமாக்கியிருக்கிறோம். எந்த இடத்திலும் எதற்கும் சமரசம் செய்யாமல் இயக்குநரும், இவரும் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதற்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் முழு ஒத்துழைப்பையும் அளித்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.