ஹைபர்லிங் பாணியில் புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம். இரண்டு திருடர்கள், ஆண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறிக்கம் ஒரு இளம் பெண், கந்து வெட்டியில் பணம் சம்பாதிக்கும் தாதா, கிடைத்த கேப்பில் எல்லாம் பணம் பறிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. இவர்களுக்கு பணம் ஒரு போதை, வெறி. அதை அடைய எந்த லெவலுக்கும் போவார்கள். ஆனால் ஒரு குடும்பத்தை காப்பாற்ற பணம் தேவை. இப்படியான சூழ்நிலையில் பணம் பல வழிகளில் பயணித்து ஏமாற்றுகாரர்களிடமிருந்து தப்பி தேவையானவர்கள் கைக்கு எப்படி வந்து சேர்கிறது என்பதுதான் கதை.
தர்மத்துக்காக சூழ்ச்சி செய்தால் சூழ்ச்சியும் தர்மமே என்கிற கீதையின் வாசகத்திற்கேற்ப ஒரு படத்தை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விநாயக் துரை. படத்தில் நடித்திருக்கும் தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் தனி மேனரிசத்தோடு நடித்து அதிகம் கவனம் பெறுகிறார். வித்தியாசமான வில்லன் சிரிப்பு முதலில் ரசிக்க வைக்கிறது. போக போக சலிக்க வைக்கிறது.
ஒரு கதை நடக்கும்போதே அந்த கதைக்குள் மற்ற கதை மாந்தர்கள் வருவது மாதிரியான திரைக்கதை சுவாரஸ்யம் தருகிறது. பணம் மனிதர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குகிறது. இவற்றில் கடவுளின் திருவிளையாடல் என்ன? என்கிற இரண்டு விஷயங்களையும் இணைத்து கொடுத்திருக்கிறார்கள். திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தும் படம் மெதுவாக நகர்வது ஒரு குறை. திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் கவனிக்கத்தக்க படமாகி இருக்கும்.