குடியின் தீமையை வலியுறுத்தி இதற்கு முன்பும் பல படங்கள் வந்திருக்கிறது. சமீபத்தில்கூட ‘குடிமகன்’, ‘கிளாஸ்மேட்’ படங்கள் வந்திருக்கிறது. அவற்றில் இருந்து மாறுபட்டு தாய்&மகன் உறவின் பின்னணியில் கதை சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெய கிருஷ்ணமூர்த்தி. அவரே கதையின் நாயகனாக நடித்தும் இருக்கிறார்.
கள்ளச் சாசராயத்தில் கணவனை பலி கொடுத்த ஈஸ்வரி ராவ் அரசு சாராயத்துக்கு மகனை பலி கொடுப்பதுதான் படத்தின் ஒன் லைன். கணவன் குடிக்கு பலியானது போன்று மகன் (ஜெய கிருஷ்ணமூர்த்தி) ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவனை வெளியூரில் படிக்க வைத்து ஆளாக்குகிறார்,. பள்ளி வரை நன்றாக இருந்த மகன் கல்லூரியில் தடம் மாறுகிறார். கூடா நட்பு, திடீர் காதல் இவற்றால் வாழ்க்கையை இழக்கிறான். சாந்தினியை திருமணம் செய்யும் அவன் ஒரு குழந்தைக்கு தந்தையான பிறகும் குடியில் மூழ்கி கிடக்கிறான். இது எதுவும் தெரியாமல் மகனை காண வரும் தாய் என்ன முடிவெடுக்கிறாள் என்பதுதான் கதை.
படத்தின் கதை புதிதில்லை என்றாலும் அதனை யதார்த்தமான காட்சிகள் மூலம் ஆடியன்சை நெகிழ வைக்கிறார் இயக்குனர். குடிக்கு அடிமையான பிறகு தன் நடிப்பின் மூலம் அனுதாபத்தையும் அள்ளுகிறார். சாந்தினி கல்லூரி மாணவியாகவும், குடிகார கணவனின் மனைவியாவும் இருமுகம் காட்டி நடித்திருக்கிறார். தாயாக வரும் ஈஸ்வரி ஒரு கிராமத்து தாயாகவே வாழ்ந்திருக்கிறார். கிளைமாக்சில் மகன் சாவுக்கு காரணமானதை அழித்தொழிக்கும் காட்சியில் கண்ணகியாக மாறுகிறார்.
ஒளிப்பதிவாளர் கா.சத்யராஜும் இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறார்கள். நல்ல கருத்தை சொல்ல வந்த படம் அதை யதார்த்தமாக நல்ல விதமாக சொல்லியிருக்கலாம். ஆலகால விஷமான மதுவின் தீமையை இன்னும் கொஞ்சம் இனிப்பு தடவி தந்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.