ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்
“தி கிரேட் இந்தியன் கிச்சன்”
படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த த கிரேட் இண்டியன் கிச்சன் படத்தின் ரீமேக். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:
இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி.
மலையாளத்தில் நடித்த நிமிஷாவின் நடிப்பில் 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. இதுபோன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். என்றார்.