ஒவ்வொரு படம் வெளிவதற்கு முன்பு, அது பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்படும். சில வருடங்களுக்கு முன்பு வரை 50 பத்திரிகையாளர்கள்தான் இந்த திரையீடலுக்கு வருவார்கள். ஆனால் சமீபகாலமாக 200 பேருக்கு மேல் வருகிறார்கள். காரணம் திரைப்பட பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் போலிகள் பெருகி விட்டார்கள்.
வந்ததோடு இல்லாமல் ஒரு பத்திரிகையாளராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபுசாலமன் இயக்கிய செம்பி படம் திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் அவர் மேடையேறி பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொன்னார். உடனே சில பத்திரிகையாளர்கள் “நல்ல படம் எடுத்திருக்கிறீர்கள் ஆனால் எப்படி படத்தின் கடைசியில் இயேசுவின் வாசகத்தை போடுகிறீர்கள்? நீங்கள் கிறிஸ்தவர் என்பதால் படத்தில் கிறிஸ்தவத்தை திணிக்கிறீர்களா” என்று சாரமாரியாக கேட்டனர். ஒரு கட்டத்தில் பிரபுசாலமானும் உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
“இந்த படம் சக மனிதர்களின் மீதான அன்பை போதிக்கிறது. இதனால் படத்தின் கடைசியில் அன்பு குறித்து இயேசுவின் வாசகத்தை போடுகிறார்கள். இதில் என்ன தவறு. படத்தின் கடைசியில் ஆன்றோர்கள், சான்றோர்கள் சொன்னதை போடுவது ஒன்றும் புதிதில்லை, பெருகிவிட்ட போலி பத்திரிகையாளர்கள் தங்களுக்கு ஒரு அடையாளத்தை தேடிக் கொள்ள இதுபோன்று செயல்படுகிறார்கள்” என்றார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.