ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான படம் ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக 3டி கண்ணாடி அணிய வேண்டும். இந்த கண்ணாடியின் கட்டணமாக குறைந்த பட்சம் 30 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 75 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இந்த கண்ணாடியின் அடக்க விலை 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரைதான்.
அவதார் படம் ஒரு தியேட்டரில் 10 நாள் ஓடுவதாக வைத்துக் கொள்வோம் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் என்றால் ஒரு கண்ணாடி ஒரு நாளைக்கு சராசரியாக 200 ரூபாய் சம்பாதித்து கொடுக்கிறது. 10 நாளைக்கு 2000 ரூபாய் சம்பாதித்து கொடுக்கிறது. சராசரியாக ஒரு காட்சிக்கு 100 கண்ணாடி வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் கண்ணாடி மட்டும் சம்பாதித்து கொடுப்பது இரண்டு லட்சம் ரூபாய்.
இது ஒரு மினிமம் கணக்கு இந்த தொகைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. இது தனியாக தியேட்டர்காரர்களின் பாக்கெட்டுக்கு செல்கிறது. பத்து ரூபாய் மதிப்புள்ள பாப்கார்ன் பாக்கெட்டை 100 ரூபாய்க்கு விற்று சம்பாதிப்பது போல இந்த கண்ணாடி பிசினஸும் தியேட்டரில் பகல் கொள்ளை போன்று நடந்து வருகிறது. இதனை தட்டிக் கேட்க யாரும் இல்லை.