அந்தக் காலத்தில் ஒரு படம் வெளியானால் அந்த படம் 100 நாட்கள் தொடர்ந்து தியேட்டரில் திரையிடப்பட்டால் நூறாவது நாள் விழா கொண்டாடுவார்கள். 25 வாரங்கள் தொடர்ந்து ஓடினால் வெள்ளி விழா கொண்டாடுவார்கள். ஆனால் இப்போது எந்த படமும் 100 நாள் ஓடுவதில்லை காரணம் ஒரே படம் ஒரே நேரத்தில் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டு மிகக் குறைந்த நாட்களில் வசூலித்து விடுவது என்கிற வியாபார தந்திரம் இப்பொழுது செயல்படுகிறது.
சிலர் தங்கள் ஆசைக்காக ஏதாவது ஒரு தியேட்டரில் படத்தில் காலை காட்சியாக அல்லது ஒரு காட்சியாக 100 நாட்கள் ஓட்டி விழா கொண்டாடுவார்கள். அல்லது போஸ்டர் ஒட்டி மகிழ்வார்கள் ஆனால் இப்போது அப்படியும் இல்லை.
படம் வெளியான தேதியை கணக்கிட்டு 50-வது நாள் விழா, நூறாவது நாள் விழா, வெள்ளி விழா என்றெல்லாம் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் தங்களை தாங்களே பாராட்டிக் கொள்வது போல, தங்கள் அரிப்புக்கு தாங்களே சொரிந்து கொள்வது போல இருக்கிறது.
அதோடு இதில் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் தாங்கள் ஏதோ ஒரு வெற்றி படத்தை தந்து விட்டது போல மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் அன்றாட செய்திகளை தகவல்களை தெரிந்து கொள்கிற மக்கள் ஏமாறுவார்களா என்ன?